முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், நாட்டிலேயே முதல்முறையாக பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், ரோபோ எந்திரத்தை களம் இறக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

கேரளாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஜென்ரோபாட்டிக்ஸ் ‘தாங்கள் தயாரித்த ரோபோ எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இந்த ரோபோவுக்கு ‘பெருச்சாளி’ என பெயர் வைத்துள்ளது.

இது குறித்து கேரள நீர் ஆணையத்தின் மேலாளர் இயக்குநர் ஏ ஷைனாமோல் கூறுகையில்,

‘ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ரோபோ பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் முறைப்படி களத்தில் இறக்குகிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. எங்களின் நோக்கம் உள்நாட்டு நிறுவனத்தை ஊக்கப்படுத்துவதுதான். இந்த ரோபோ தயாரிப்புக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு செய்துள்ளது.

சோதனை முயற்சியாக இந்த ரோபோ எந்திரம் திருவனந்தபுரத்தில் உள்ள 5 ஆயிரம் பாதாளச் சாக்கடையில் இறக்கி சுத்தம் செய்து பார்க்கப்பட்டது. அனைத்தும் சிறப்பாக நடந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
இந்த ரோபோ எந்திரத்தை தயாரித்த ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விமல் கோவிந்த் கூறியதாவது:

9 இளைஞர்கள் கொண்ட குழுதான் இந்த ரோபோ எந்திரத்தை தயாரித்தது. இந்த ரோபோ ‘வை-பை’, ‘புளூடூத்’, மற்றும் ‘கன்ட்ரோல் பேனல்’ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும். இதில் உள்ள பக்கெட் போன்ற அமைப்பும், துடுப்பு போன்ற அமைப்பும், கழிவுகளை எளிதாக அள்ளி, சுத்தம் செய்யும். இந்த திட்டத்துக்கு எங்களுக்கு கேரள அரசின் நீர் வாரியம் முழுமையாக நிதி அளித்து ஆதரவு அளித்துள்ளது. குறிப்பாக சுத்தம் செய்தல், பாதாளச்சாக்கடை குழாய்களை சீரமைத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது

நாள்தோறும் கிடைக்கும் ரூ.300 முதல் ரூ.500 கூலிக்காக உயிரை பணயம் வைத்து பாதாளச்சாக்கடையில் இறங்கி விளிம்பு நிலை சமூகத்தில் உள்ள மக்கள் சுத்தம் செய்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கும், மனிதர்களே சாக்கடையை சுத்தம் செய்யும் முறையை மாற்றவும் எங்களின் கண்டுபிடிப்பு உதவும். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பாதாளச்சாக்கடையில் உள்ள 30 கிலோ கழிவுகளை இந்த ரோபா அள்ளியது. அதில் சானிட்டரி நாப்கின், துணிகள், அறுவைசிகிச்சை பிளேடுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், அடுத்த ஒருமணி நேரத்தில் இந்த ரோபா அந்த பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்து முடித்து விட்டது. எந்தவிதமான பாதாளச் சாக்கடையிலும் இதை பயன்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நிறுவனத்தின் தொழில் நுட்ப பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ராஷித் கூறுகையில், ‘பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த எந்திரத்தை இயக்க பயிற்சி அளிக்க இருக்கிறோம். இதை எளிதாகக் கையாளலாம், ‘ரிமோட் கார்’ போல் இயக்கலாம். இப்போது ஆங்கிலத்தில் கட்டளைகளைப் பிறப்பித்து இயக்குகிறோம், விரைவில் பிராந்திய மொழிகளுக்கு ஏற்ப மாற்றலாம். இந்த ரோபோவை தயாரிக்க 8 மாதங்கள் வரை தேவைப்பட்டது. ‘நுமாட்டிக்ஸ்’ தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ இயக்கப்படுகிறது.

இந்த ரோபோ குறித்து அறிந்து இதேபோல் வாங்குவதற்காக தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரா அரசுகளும் எங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றன. மேலும் கனடா, இங்கிலாந்து நாடுகளும் எங்களிடம் தகவல் கேட்டுள்ளன.

டெல்லியில் வரும் 22-ம் தேதி நடக்கும் ஸ்வச்பாரத் திட்டத் பயிலரங்கில் இந்த ரோபோ குறித்த செயல்விளக்கம் காட்ட அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.மார்ச் 2-ம் தேதி ஆற்றுக்கால் பகவதி கோயில் பொங்கல் தினத்தின்று, இந்த பெருச்சாளி ரோபோவை முறைப்படி களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து