முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகப்பெரிய செல்வந்தர்களைக் காட்டிலும் அரசுக்கு நான் அதிக வரி செலுத்துகிறேன் மைக்ரோசாப்ட்ஸ் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: என்னைவிட மிகப் பெரிய செல்வந்தர்களைக் காட்டிலும் நான் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியவனாக இருக்கிறேன் என்று மைக்ரோசாப்ட்ஸ் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள வரிக் குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா பற்றி கூறுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
90 பில்லியன் டாலர் அளவுக்கு நான் அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. என்னைப்போன்ற மற்ற பணக்காரர்களை ஒப்பிடும்போது அவர்களைவிட 10 பில்லியன் டாலர் கூடுதலாகவே வரி செலுத்துபவனாக நான் இருக்கிறேன். உண்மையில் அந்த மக்களும் என் அளவில் அதிகப்பட்ச வரி செலுத்தவேண்டிய நிலையில் இருப்பவர்கள்தான். ஆதலால் அத்தகைய பெரும்பணக்காரர்களையும் அரசாங்கம் சரியான வரி செலுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.

எனது சொத்திலிருந்து 40 பில்லியனுக்கு அதிகமான தொகையை தொண்டு காரியங்களுக்காக வழங்கிவருகிறேன். முற்போக்கு எண்ணம் படைத்த அனைத்து ஜனநாயகவாதிகளும் இவ்வகையான உதவிப்பணிகள் குறித்து கொஞ்சம் யோசிக்கலாம்.

தற்போது ஆளும் குடியரசுக் கட்சியின் புதிய வரிச்சட்டம் பிற்போக்குத்தனமான வரிச்சட்டம், முற்போக்கானதல்ல என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. இது சாதாரண குடிமகனுக்கு அல்ல. உச்சநிலையில் உள்ள செல்வந்தர்களுக்கே பயனளிக்கக் கூடியது. வேலைக்குச் செல்லும் மக்களுக்கும் நடுத்தர வர்க்கங்களுக்கும் இந்த வரிச்சட்டம் துளியும் உதவாது.

செல்வந்தர்கள் நடுத்தர வர்க்கத்தையோ அல்லது ஏழைகளையோவிட மிகுந்த நன்மைகள் பெறுவதற்கு முனைந்துள்ளனர், எனவே நீங்கள் பார்க்க விரும்பும் பொதுவான போக்குக்கு எதிர்நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதிக அளவில் கணிசமான தொகையை வரியாகச் செலுத்தவேண்டிய பணக்காரர்களோ மிகவும் பாதுகாப்பான வளையத்துக்குள் உள்ளனர்.

இப்பொழுதும் நீங்கள் பார்த்தீர்களேயானால், உலகில் ஆறில் ஒரு பங்கு மக்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். ஆனால், இங்கு அசாதாரணமான வரி சமத்துவமின்மை உருவாகியுள்ளது.

இதனால் அதிருப்தியான நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். மாற்றங்கள் என்பது அரசின் கொள்கைகளில் தேவை என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் அந்த மக்கள் விரும்பும்படியான ஒரு பணியை ஏன் செய்யவில்லை என்பதுதான் நமது கேள்வி. இவ்வாறு பில்கேட்ஸ் தனது பேட்டியில் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த வரிக் குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த டிசம்பர் 2017ல் நிறைவேற்றப்பட்டது.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர் அமேஸான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸாஸுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பில் கேட்ஸ் அமெரிக்க வரிச் சீர்திருத்தச் சட்டங்களைப் பற்றி விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து