முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னையில் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சூரத்திலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று மாலை 5.20 மணிக்கு வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஐ.என்.எஸ் அடையார் கடற்படைதளத்திற்கு வந்தார். அங்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இல.கணேசன் எம்.பி. ஆகியோர் வரவேற்றனர். சிறிது நேரம் அங்கு ஓய்வெடுத்த பிரதமர், மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு விழா நடைபெறும் கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார். அங்கு வழிநெடுக அ.தி.மு.க.வினரும் பா.ஜ.வினரும் திரண்டு நின்று மேளதாளங்களோடு உற்சாக வரவேற்பளித்தனர், பிரதமர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

கலைவாணர் அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70- வது பிறந்த நாளையொட்டி 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் அம்மா ஸ்கூட்டர் திட்டத்திற்கான தொடக்க விழா துவங்கியது. விழாவில் அனைவரையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

 கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை வாக்குறுதியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவரது கனவுத்திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்திருப்பது மிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்த திட்டத்தை தேசிய அளவில் பிரபலமான திட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

மகளிருக்கான ஸ்கூட்டர் திட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர், நேற்று நடைபெற்ற விழாவில், மதுபாலா,தீபா, பல்சான்னா, தங்கமலர், கவிதா ஆகிய பெண்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக ஸ்கூட்டர் சாவியையும் ஆர்.சி புத்தகத்தையும் வழங்கினார். இந்த விழாவில் மொத்தம் ஆயிரம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து