முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70-வது பிறந்த நாளை முன்னிட்டு விழாக்கோலம்: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை திறப்பு - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். திறந்து வைத்தனர்

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான நேற்று அவரின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

உற்சாகமாக...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

7 அடி உயரத்தில்...

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி ஜெயலலிதாவின் சிலை ஆந்திராவில் தயாரிக்கப்பட்டது. அந்த சிலை முழு உருவ வெண்கல சிலையாகும். ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போன்று 7 அடி உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்த சிலை சென்னை கொண்டு வரப்பட்டது.

எம்.ஜி.ஆர். சிலை அருகில்...

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதா சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக எம்.ஜி.ஆர். சிலை அருகில் பள்ளம் தோண்டப்பட்டு பீடம் அமைக்கும் பணிகள் நடந்தன. கடந்த 21-ம் தேதி பீடத்தில் ஜெயலலிதாவின் சிலை நிறுவப்பட்டது. அதேபோல் எம்.ஜி.ஆர். சிலையின் பீடமும் கருப்பு நிற கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலையின் பீடமும், ஜெயலலிதா சிலையின் பீடமும் அருகருகே சம தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

விழாக்கோலம்...

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான நேற்று சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. காலை 9.30 மணி முதலே ஏராளமான அ.தி. மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் திரண்டனர். 10 மணிக்கெல்லாம் அ.தி.மு.க. தலைமைக் கழகம் விழாக்கோலமாக காணப்பட்டது.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்...

சிலை திறப்பு விழாவுக்காக அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு இருக்கைகள் போடப்பட்டு நிர்வாகிகள் அதில் அமர வைக்கப்பட்டிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்தனர். காலை 11.10 மணிக்கு ஜெயலலிதாவின் திருவுருவ சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் திறந்து வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழச்சி ஆரவாரம் செய்தனர்.

புரட்சித்தலைவி அம்மா...

பின்னர் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது புரட்சித்தலைவி அம்மா” என்ற பத்திரிகையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு ஜெயலலிதா பிறந்த நாளை குறிக்கும் வகையில் 70 அடி நீளத்தில் கேக் தயாரிக்கப்பட்டு இருந்தது. அந்த கேக் வெட்டப்பட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் மலரும் வெளியிடப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்...

அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பதாகைகள் - பேனர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் நுழைவு வாயிலில் வாழை மரம், தென்னை ஓலை, பழங்களை கொண்டு அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. கட்சி அலுவலகத்தை சுற்றி ஜெயலலிதாவின் புகழை போற்றி பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வழிநெடுக அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து