ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்கள்: கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி
kanyakumari collector inspect the fishers village

கன்னியாகுமரி மாவட்டம், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை  கலெக்டர்  பிரசாந்த் மு. வடநேரே  நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஓகிப் புயலின் காரணமாக கடுமையான பாதிப்புக்குள்ளான இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், ஏழுதேசம் சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை, நீரோடி ஆகிய மீனவ கிராமங்களை பார்வையிட்டு பங்குத் தந்தையர்கள், மீனவப் பிரதிநிதிகள் மற்றும் ஓகிப்புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஆகியோரிடம் கலந்துரையாடினார்.  ஓகிப்புயலால் கடலில் காணாமல் போன 139 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசினுடைய நிவாரணத்தினை விரைந்து பெற்று வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.  மேலும், புயலினால் காணாமல் போன மற்றும் இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு உரிய வேலை வாய்ப்பினை அரசிடம் பேசி ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஓகிப்புயலின் காரணமாக படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்த உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்று விரைந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.  பின்பு கடலரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.  மேற்கொண்டு கடலரிப்பினை தடுப்பதற்காக கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதாக தெரிவித்தார்.  மேலும,; இக்கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பங்குத் தந்தையர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இவ்வாய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர்  இராஜகோபால் சுன்கரா  மீன் வளத்துறை துணை இயக்குநர் லேமக் ஜெயகுமார், மீன் வளத்துறை உதவி இயக்குநர் த.நடராஜன் (நாகர்கோவில்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து