நடிகை ஸ்ரீதேவி மரணம்: கமல் -ரஜினி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      சினிமா
rajini-kamal mourn 2018 2 25

சென்னை : நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து நடிகர் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

நான்கு வயதில் திரையுலகில் அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் திரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மறைந்திருக்கிறார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் இறப்புக்கு டுவிட்டரில் தனது இரங்கலை பதிவுசெய்துள்ள நடிகர் கமல்ஹாசன்,

கொடுமைதான்


மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்பான நண்பர்

நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்,  நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது . ஒரு அன்பான நண்பரை இழந்து விட்டேன் . திரைத்துறை ஒரு சகாப்தத்தை இழந்துவிட்டது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினர், நண்பர்களை போன்று நானும் அந்த வலியை உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமான படத்தில் அவருடன் ரஜினியும் - கமலும் நடித்திருந்தனர். அதன் பின்னர் இவர்கள் மூவரும் இணைந்து நடித்து வெளியான 16 வயதினிலே படம் பெரிதும் பேசப்பட்டது. மூன்றாம் பிறை, பாலுமகேந்திராவின் தேசிய விருது வாங்கிய படம். மனநலம் பாதித்தவராக மிரட்டிய ஸ்ரீதேவி, இன்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீதேவிக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது. மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, அர்ச்சனா என்ற கேரக்டரில் பாடகியாக கலக்கி இருப்பார். இவையெல்லாம் அந்தக்காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட படங்கள்.

குழந்தை, கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை தான் என்று கமல் கூறியுள்ளதும், தனது அன்பான தோழியை இழந்து விட்டேன் என ரஜினி இரங்கல் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து