முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலீதா ஜியா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டாக்கா, ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா ஜாமீன் மனு மீதான தீர்ப்பை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கலீதா ஜியாவின் ஜாமீன் மனு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுமுன்தினம்  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜாமீனில் விடக் கோரி கலீதா ஜியாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். பின்னர், விசாரணை நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு உத்தரவு தொடர்பான மேலும் சில ஆவணங்களை பெற்ற பிறகே, கலீதா ஜியாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பிக்க முடியும். அதுவரையில், அவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

 விசாரணை நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்துக்கு கிடைக்கும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.52 லட்சம் டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கலீதா ஜியாவுக்கு இம்மாதம் 8-ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பால், இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை கலீதா ஜியா இழந்ததால் இது அவருக்கு ஒரு மாபெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில்தான், அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து