ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15 -ம் தேதியுடன் மூடப்படும்: டிராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      வர்த்தகம்
Aircel

புது டெல்லி, ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15 -ம் தேதியுடன் மூடப்படும் என டிராய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏர்செல் மொபைல் சர்வீஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வரும் அழைப்புகளை ஏற்க முடியாமலும் பிறரை தொடர்பு கொள்ள முடியாமலும் பெரும் அவதியடைந்தனர். ஏர்செல் மற்றும் அதற்கான டவர் நிறுவனத்துடன் இருந்த நிதி பிரச்சனை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நிதி பிரச்சனை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு தற்போது ஏர்செல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல வருடங்களாக ஏர்செல் சேவையை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்களின் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் நேற்று முன்தினம் மனு அளித்தது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் மனுவை ஆராய்ந்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. ஏர்செல் நிறுவனம் கடும் கடன் சுமையில் உள்ளதால், அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் சேவையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏர்செல் நிறுவனத்தின் சேவை ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மாற்றிக்கொள்ள ஏதுவாக இந்த நேரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து