முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்: திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி; கம்யூனிஸ்ட் கோட்டை தகர்ந்தது - மேகாலயாவில் இழுபறி - நாகாலாந்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க முயற்சி

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சட்டசபைதேர்தல் நடந்த மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திரிபுரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து அங்கு ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் கம்யூனிஸ்ட் கோட்டை அங்கு தகர்ந்துள்ளது. மேகாலயாவில் இழுபறி நிலை நீடிக்கிறது. நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்ச்சித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை...

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டன. திரிபுராவில் பிப்ரவரி மாதம் 18-ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி  27-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் மொத்தமுள்ள 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகாலயாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் நேற்று காலை எண்ணப்பட்டன.

கருத்துகணிப்புக்கள்

மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரி கட்சி ஆட்சி நடந்து வந்தது. நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வந்தது.
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாரதீய ஜனதா இந்த தேர்தலை சந்தித்தது. மேகாலயாவில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்கள் தெரிவித்திருந்தன.

முதல்வர் வெற்றி...

நாகாலாந்தில் அங்காமி -2 தொகுதியில் முன்னாள் முதல்வர் நெப்யூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெரேன் தொகுதியில் போட்டியிட்ட இன்னாள் முதல்வர் டி.ஆர். ஜிலியாங் வெற்றியும், பா.ஜ.க பிரமுகர்களில் துயி தொகுதியில் ஒய் பட்டான் வெற்றியும் கே.எல். சிஷி, அடாய்ஜூ தோல்வியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்று விட்டது. மேகாலயாவில் ஆட்சி அமைக்க இழுபறி நிலை நீடிக்கிறது. நாகாலாந்தில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.

கிரண் ரிஜிஜூ நம்பிக்கை

நாகலாந்து மாநிலத்தை ஆட்சி செய்த நாகா மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க. அந்த கூட்டணியை முறித்து கொண்டது. புதிதாக தொடங்கப்பட்ட தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலை பா.ஜ.க. சந்தித்தது. நேற்று வெளியாகியுள்ள வரும் தேர்தல் முடிவுகளின்படி நாகா மக்கள் முன்னணி 29 இடங்களில் வெற்றி பெற்றது.  பா.ஜ.க. கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 2 இடங்களில் வெற்றிப்பெற்றது.

என்.பி.எப் தீர்மானம்...

இங்கு ஆட்சி அமைக்க 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், தேர்தலுக்கு முன்னர் தனது கூட்டணி கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சரும், நாகலாந்து மாநில தேர்தல் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜூ, நாகலாந்தில் மற்ற கட்சிகளுடன் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாகா மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஜிஜூ, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக நாகா மக்கள் முன்னணி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

நாகலாந்தில் பெற்றுள்ள வெற்றியின் மூலம் வடகிழக்கு இந்தியாவில் பா.ஜ.க. தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிக இடங்களில் ...

60 இடங்களை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  முதல்வர் முகுல் சங்மா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், ஐக்கிய குடியரசு கட்சி 6 இடங்களிலும், மக்கள் குடியரசு முன்னணி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தொங்கு சட்டசபை

இங்கு ஆட்சியை கைப்பற்ற 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், அதிகமான இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவை சிறிய கட்சி அல்லது சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் காங்கிரஸ் கேட்டுப் பெற்று அரசு அமைத்தாலும், அந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.  எனவே, தற்போது அமையவுள்ள சட்டசபை தொங்கு சட்டசபையாக இருக்கும். கூட்டணி கட்சிகள் திடீரென்று காலை வாரி விட்டால் மீண்டும் பொது தேர்தலை மேகாலயா சட்டசபை சந்திக்க நேரிடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

திரிபுரா
 

மொத்தம் = 59 / 60
பா.ஜ., கூட்டணி -43
இடதுசாரிகள் - 16
காங். - 0
மற்றவை - 0

நாகாலாந்து

மொத்தம் = 60 / 60
என்.பி.எப் -29
பா.ஜ.க கூட்டணி - 29
மற்றவை -2
காங். - 0

மேகாலயா

மொத்தம் = 59 / 60
காங்., - 21
என்பிபி - 19
பா.ஜ., - 2
மற்றவை -17.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து