கோலியின் அடுத்த 'கெட்- அப்': பல வண்ணங்களில் 'டாட்டூஸ்' உடலில் வரைந்து நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      விளையாட்டு
kohli get up 2018 3 4

மும்பை : தென் ஆப்பிரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா வந்துள்ள கேப்டன் விராட் கோலி அடுத்ததாக தனது 'கெட்-அப்'பை மாற்றத் தொடங்கிவிட்டார். உடலில் பல இடங்களில் பல வண்ணங்களில் டாட்டூஸ் வரைந்து வருகிறார்.

கேப்டன் விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதேபோல டி20 தொடரையும் 2-1 என்று கணக்கில் கைப்பற்றி கடந்த வாரம் மும்பை திரும்பினர்.

இந்நிலையில், அடுத்து இலங்கையில் நடக்க உள்ள நிடாஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடைப்பட்ட நாட்களில் தனது தோற்றத்தை விராட் கோலி மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார்.


இந்திய அணியில் மிகவும் உடற்கட்டுடன், சிறந்த உடற்தகுதியுடன் கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். மேலும், விளம்பரங்களில் நடிப்பது போன்றவற்றினால், உடல் அழகை பராமரிப்பதில் அதிக அக்கறையும் எடுத்துக்கொள்கிறார்.

இந்தசூழலில், நேற்று மும்பையில் உள்ள பிரபர டாட்டூஸ் வரையும் பார்லருக்கு சென்று தனது இடது பக்க தோள்பட்டையில் பலவண்ண படங்களை விராட் கோலி வரைந்துள்ளார். இந்தப் படம் வரைந்தது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் பார்லரில் இருந்த ரசிகர் ஒருவர் இதை புகைப்படம் எடுத்து இன்ஸ்ட்டிராகிராமில் வெளியிட்டுவிட்டார்.

விராட் கோலி உடலில் ஏற்கெனவே பல்வேறு டாட்டூ படங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தவை, கடவுள் சிவன், கைலாய மலையில் தவம் இருப்பது போலவும், பின்புறம் மானசரோவர் மலை இருப்பது போலவும் வரைந்திருப்பதாகும்.

மேலும், தனது தாய், தந்தையின் பெயரையும், ஒருநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஜெர்சி எண் ஆகியவற்றையும் விராட் கோலி உடலில் எழுதியுள்ளார். இந்த முறை சாமுராய் வீரன் தோற்றத்தையும், ஓம் என்ற வார்த்தையையும் வரைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து