அதிபர் பதவிக்கான நிபந்தனை நீக்கம் ஜீ ஜின்பிங்கை இனி அசைக்க முடியாது - அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      உலகம்
Xi Jinping 2018 3 5

பெய்ஜிங் : சீனாவில் அதிபர் பதவியை ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற நிபந்தனையை நீக்க கோரும் தீர்மானம், நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற மாநாட்டில் ஒருமனதாக நிறைவேறியது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து ஆண்டுதோறும் நடைபெறும் அதிகாரமிக்க இந்த மாநாட்டில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டு பின்னர் செயல்வடிவம் பெறுகிறது.

சீனா முழுவதிலிருந்தும் சுமார், 5,000 பிரதிநிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சீனாவில் அதிபர் பதவியை ஒருவர் இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற கால வரம்பை நீக்க இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டு அதற்கான தீர்மானம் முழுமனதாக நிறைவேற்றப்பட்டது.

சீன தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் மூலம், சீனாவில் இனி அதிபர் அல்லது துணை அதிபர் பதவியில் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அல்லது காலவரையின்றி நீடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், 23 லட்சம் ராணுவ வீரர்களைக் கொண்ட வலுவான ராணுவத்துக்கு தொடர்ந்து தலைமையேற்கும் வாய்ப்பும் இந்த தீர்மானத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான உரிய சட்டத்திருத்தங்களை செய்ய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் மிக சக்திவாய்ந்த செல்வாக்கு மிக்க தலைவராக ஜீ ஜின்பிங் விளங்குவதாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2016-இல் அறிவித்தது. சீன அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி வகித்து வரும் 64 வயதான ஜீ ஜின்பிங்கின் பதவிக் காலம் வரும் 2023-ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு அதிபராக பதவி வகிக்க தடையாக இருக்கும் அந்த சட்டப் பிரிவை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான சட்டத்திருத்தம் அமலுக்கு வரும் நிலையில், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகும், சீன அதிபர் பதவியில் தொடர்ந்து அசைக்க முடியாத சக்தியாக ஜீ ஜின்பிங் விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

சீன அதிபராக ஜீ ஜின்பிங் காலவரையின்றி அப்பதவியில் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் (71) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது:

சீன அரசு மேற்கொண்டுள்ள முடிவு மகத்தானது. அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஜீ ஜின்பிங் மிகவும் தகுதியான நபர். நாங்களும் இதுபோன்ற ஒரு அதிரடியான முடிவை என்றாவது ஒரு நாள் எடுக்க கூடும் என்று டிரம்ப் நகைச்சுவையாக கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து