3 நாடுகள் இடையேயான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் கொழும்பில் இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை மோதல்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      விளையாட்டு
rohit sharma 2018 3 5

கொழும்பு : இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் டி-20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
|
பிரேமதாசா மைதானம்

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து 3 நாடுகள் இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. 3 நாடுகள் கலந்து கொள்ளும் டி-20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 18-ம் தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில்...


இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

முன்னணி வீரர்களுக்கு...

கேப்டன் விராட்கோலி, டோனி, புவனேஷ்வர்குமார், பும்ரா, குல்தீப்யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா போன்ற முன்னணி வீரர்களுக்கு 3 நாடுகள் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ‌ஷர்துல் தாகூர், விஜய்சங்கர், ரி‌ஷப்பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ரோகித் சர்மா கேப்டன்...

இந்திய அணியை ரோகித்சர்மா வழி நடத்தி செல்கிறார். அவர் கேப்டனாக இருந்த நான்கு டி-20 போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றியை பெற்றுக்கொடுத்து சாதனை புரிந்துள்ளார். இதே நிலையை தக்க வைத்துக் கொள்ள அவர் கடுமையாக போராடுவார். தென்ஆப்பிரிக்காவில் டி-20 தொடரில் வென்ற நம்பிக்கையுடன் இந்தப்போட்டியில் ஆடுகிகிறது. இதனால் இந்தப்போட்டி தொடரிலும் வென்று ‘நிதாஹாஸ்’ கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

மேத்யூஸ் இல்லை...

தவான், ரெய்னா, மனிஷ் பாண்டே, ராகுல், யசுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல் போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர். இலங்கை அணிக்கு சன்டிமால் கேப்டனாக உள்ளார். நுவல் பிரதீப், லக்மல் ஆகியோரின் வருகை இலங்கை அணிக்கு கூடுதல் பலமே. உபுல்தரங்கா, குஷால் மெண்டீஸ், திசாரா பெரைரா, அகிலா தனஞ்செயா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். காயம் காரணமாக மேத்யூஸ் இந்த போட்டியில் ஆடவில்லை. அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான டிக்வெலா நீக்கப்பட்டுள்ளார்.

மகமதுல்லா கேப்டன்....

வங்காளதேச அணிக்கு மகமதுல்லா கேப்டனாக உள்ளார். அந்த அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான சகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியது வங்காளதேசத்துக்கு பாதிப்பே. முஷ்பிகுர் ரகீம், தமிம் இக்பால், முஷ்டாபிசுர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இலங்கை அணியும், வங்காளதேசமும் கடந்த மாதம் டி-20 போட்டியில் மோதின. சொந்த மண்ணில் நடந்த இந்த தொடரில் இலங்கை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.  அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து