முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு கெளட்டாவின் மூன்றில் ஒரு பகுதியை மீட்டது சிரியா ராணுவம்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்: சிரியாவின் கிழக்கு கெளட்டா பகுதியில் தொடர்ந்து முன்னேறி வரும் அரசுப் படைகள், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த மூன்றில் ஒரு பகுதியை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் சிரியா படைகள் நிகழ்த்திய குண்டு வீச்சில் 14 பேர் உயிரழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரெமி அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை கூறியதாவது: முற்றுகையிடப்பட்டுள்ள கிழக்கு கெளட்டா பகுதியில், அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி கிழக்கு கெளட்டாவின் 33 சதவீத நிலப்பரப்பு, அதாவது மூன்றில் ஒரு பகுதி தற்போது அரசுப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

அரசுப் படையினர் தற்போது பெரும்பாலும் விவசாய நிலப்பரப்புகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதால், எதிர்ப்புகள் அதிகமின்றி அவர்கள் வெகு வேகமாக முன்னேறி புதிய பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர்.

கிழக்கு கெளட்டா பகுதியின் முக்கிய நகரமான டூமாவுக்கு 2 கி.மீ. தொலைவுவரை அரசுப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றார் அவர்.

தலைநகர் டமாஸ்கஸுக்கு கிழக்கே அமைந்துள்ள கிழக்கு கெளட்டாவில் சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த கடந்த 2012-ஆம் ஆண்டில், இந்தப் பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அதிலிருந்து இந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

எனினும், கடந்த ஓராண்டாக மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டில் இழந்த கிழக்கு கெளட்டா பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை ராணுவம் மீட்டது.

இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள பகுதியை மீட்கும் முயற்சியாக அந்தப் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களையும், எல்லைக்கு அப்பாலிருந்து எறிகணைத் தாக்குதல்களையும் நிகழ்த்தின.

இந்தத் தாக்குதல்களில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாவும், உயிரிழந்தவர்களில் 120-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

எனினும், கிழக்கு கெளட்டாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் நிவாரணப் பொருள்களை ஏற்றிய தொண்டு நிறுவனங்களின் வாகனங்களும், கிளர்ச்சியாளர்கள் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், சிரியா செம்பிறைச் சங்கம் மற்றும் ஐ.நா.வின் வாகனங்கள் நிவாரணப் பொருள்களுடன் கிளர்ச்சியாளர் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிரியா ராணுவம் கிழக்கு கெளட்டா பகுதியில் வேகமாக முன்னேறி வருவதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து