கிம் ஜோங்கை சந்தித்தது தென் கொரிய தூதுக் குழு: இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      உலகம்
NORTH KOREA2018 03 06

பியான்கியாங்: வட கொரியா சென்றுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னின் பிரதிநிதிக் குழு, அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டிருந்த இத்தகைய சந்திப்பு தற்போது நிகழ்ந்துள்ளது, கொரிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து தென் கொரிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வட கொரியா சென்றுள்ள எங்கள் நாட்டுத் தூதுக் குழுவினருக்கு அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் விருந்தளித்தார்.


அப்போது, இருதரப்பு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றார் அவர்.

தென் கொரிய அதிபரின் பிரதிநிதியாக வட கொரியா சென்றுள்ள குழுவில், தென் கொரியாவின் மிக மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.

அந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியா வந்தார்.

மேலும், நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென் கொரிய அதிபருக்கு கிம் ஜோங்-உன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தச் சூழலில், வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நல்லெண்ணத் தூதுக் குழுவை வட கொரியாவுக்கு அதிபர் மூன் ஜே-இன் திங்கள்கிழமை அனுப்பினார். அந்த குழு வடகொரியாவில் இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து