நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீம் இந்தியா திரும்ப விரும்புகிறார் வழக்கறிஞர் தகவல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இந்தியா
Dawood Ibrahim 2017 06 16 0

தானே: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீம் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகள்
பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய  நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீம் தற்போது, வெளிநாட்டில் பதுங்கியுள்ளார்.  தாவூத் இப்ராகீம் மீது பல்வேறு வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சில முன் நிபந்தனைகளுடன் இந்தியா திரும்ப தாவூத் இப்ராகீம் விருப்பம் தெரிவித்துள்ளதாக  பிரபல வழக்கறிஞர் ஷ்யாம் கேஷ்வானி தெரிவித்துள்ளார்.

மும்பை ஆர்தர்...
தானே நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் ஷியாம் கேஷ்வானி இது குறித்து கூறியிருப்பதாவது:- “ தாவூத் இப்ராகீம் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், சில முன் நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது,  அதிக அளவு பாதுகாப்பு கொண்ட மும்பை ஆர்தர் சிறைச்சாலையில் மட்டுமே தான் அடைக்கப்பட வேண்டும் என்று தாவூத் இப்ராகீம் தெரிவித்துள்ளார்.


அரசு ஏற்கவில்லை
தனது விருப்பத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியிடம் தாவூத் இப்ராகீம் தெரிவித்து இருந்தார். ஆனால், தாவூத் இப்ராகீமின் எந்த ஒரு நிபந்தனையையும் இந்திய அரசு ஏற்கவில்லை” என்றார். 

இறுதி மூச்சை விட...
பேட்டி அளித்த ஷியாம் கேஷ்வானி,  தாவூத் இப்ராகீம் சகோதரரான இக்பால் இப்ராகீம் காஷ்கருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள  தாவூத் இப்ராகீம் தமது இறுதி மூச்சை இந்தியாவில் விடவே விரும்புவதாக மகாராஷ்ட்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயும் அண்மையில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து