சிலைகளை சேதப்படுத்தும் விவகாரம்: நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இந்தியா
central gcenovernment(N)

புதுடெல்லி: தலைவர்கள் சிலை உடைக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கண்டனம்
திரிபுராவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது பதட்டத்தை அதிகரித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை கருத்து
இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பதிவில், ‘லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று.  நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


பிரதமர் அதிருப்தி
இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆங்காங்கே எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டமும்  நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து எச்.ராஜா  வருத்தம் தெரிவித்தார்.  முன்னதாக  திரபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதற்கும்,  பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா  பேஸ்புக் பதிவிற்கும் பிரதமர் மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அறிவுறுத்தல்
இந்த நிலையில்  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிலைகளை சேதப்படுத்தும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரிடம் பிரதமர் கேட்டறிந்தார். அப்போது சிலைகள் அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இதை தொடர்ந்து  சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சிலைகளை சேதப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம். சிலை உடைப்பவர்கள் மீது மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து