ஏர்செல் இணைப்பில் இருந்து 5 நாட்களில் 1¼ லட்சம் பேர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற்றம்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தமிழகம்
bsnl 2018 03 07

சென்னை, 5 நாட்களில் 1¼ லட்சம் வாடிக்கையாளர்கள் ஏர்செல் இணைப்பில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மாறுவதற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு வட்ட பொது மேலாளர் ஆர்.மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு வட்ட பொதுமேலாளர் ஆர்.மார்ஷல் ஆண்டனி லியோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில், பிற நெட்வொர்க்கில் இருந்து வந்து சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கடந்த மாதம் மட்டும் திடீரென 3,06,282 பேர் மாற்று நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்தனர். இதில் பெரும்பான்மையானோர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஆவர். இந்த மாதம் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் ஏர்செல்லில் இருந்து பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் சேர்வதற்காக 1,28,790 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில் இதுவரை 66,886 ஏர்செல் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் இன்று (புதன்கிழமை) அல்லது நாளைக்குள் இணைக்கப்பட்டு விடுவார்கள்.


எங்களது வழக்கமான வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.1½ கோடி. புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் இது ரூ.2 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தில் ஆயிரத்து 127 எண்ணிக்கையிலான 2-ஜி டவர்களின் சேவை தரம் உயர்த்தப்பட உள்ளது. ஆயிரத்து 428 எண்ணிக்கையிலான 3-ஜி உபகரணங்கள் 5 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட விடுபட்ட பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நோக்கியாவுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். 4-ஜி சேவையை தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களின் 10 வட்டங்களில் தொடங்க இருக்கிறது. அதில் தமிழ்நாடு வட்டமும் இடம் பெற்றுள்ளது. சிறப்பாக பராமரிக்கப்படும் தொலைபேசி அமைப்புக்கான 2017-ம் ஆண்டு அகில இந்திய விருதை தமிழ்நாடு வட்டத்தின் நெல்லை தொலை தொடர்பு மாவட்ட தொலைபேசி அலுவலகம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, முதன்மை பொதுமேலாளர் (நெட்வொர்க்) டி.பூங்கொடி, முதன்மை பொதுமேலாளர் (மொபைல் பிளான்) பி.சந்தோசம், முதன்மை பொதுமேலாளர் (மார்க்கெட்டிங்) பி.வி.கருணாநிதி, பொது மேலாளர் (நிர்வாகம்) டி.மோகன், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கே.ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து