தமிழக சட்டசபையில் வரும் 15-ம் தேதி பட்ஜெட் தாக்கல் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் வரும் 15-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

புதிய அறிவிப்புகள்...

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த மாதம் 12-ம் தேதி ஜெயலலிதா திருவுருவ படத்தை திறந்து வைப்பதற்காக சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பிறகு சபை ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற 31-ம் தேதிக்குள் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை இடம் பெறச் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை வழங்கினார்.


சட்டசபை கூடுகிறது

இந்த நிலையில் வரும் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அனைத்துக்கட்சியினர் அடங்கிய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அதில் சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்றும் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது அனேகமாக பட்ஜெட் மீதான விவாதம் 6 நாட்கள் வரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

மானியக்கோரிக்கை...

பட்ஜெட் உரை மீதான விவாதம் முடிந்த பின்னர் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும். இந்த கூட்டம் 1 மாதம் வரை நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க இணைப்புக்கு பின்னர் முதன்முதலாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

செயலாளர் நியமனம்

சட்டசபை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்று விட்டதால் அந்த பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கல் தாமதம் ஆனது. தற்போது சபாநாயகரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்த  சீனிவாசன் சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ...

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 15-3-2018-ம் நாள், வியாழக்கிழமை, காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து