Idhayam Matrimony

சமூக விரோதிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சமூக விரோதிகள் எவராயினும், பாரபட்சமின்றி சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

3-வது நாள் கூட்டம்

கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளின் மாநாடு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். 2-வது நாளில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர்கள், அரசுதுறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. நேற்று போலீஸ் கமி‌ஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

அமைதிப் பூங்காவாக...

காவல் துறையினர் தங்களது பணியினை ஆற்றும் பொழுது ஏற்படும் எதிர்மறையான விமர்சனங்களை பொருட்படுத்தாமலும், தங்களது குடும்பத்தினருடன் கூட நேரம் செலவிட முடியாமலும், நேரம் காலம் பார்க்காமல் மக்கள் பணி ஆற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டும் பணிபுரிகின்றனர். ராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்பில் எதிரிகளுக்கு எதிராக போராடுகின்றனர். காவல் துறையினர் உள்நாட்டில் உலவும் சமூக விரோதிகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கும், பயங்கரவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் இல்லாமல், கட்டுப்படுத்தியதற்காகவும், காவல் துறைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து முதலிடம்

களவு போன சொத்துக்களை மீட்பதில், 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளாக நாட்டிலேயே நமது மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதற்காகவும், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மெட்ரோ நகரமாக சென்னையும், முதல் பெரிய நகரமாக கோயம்புத்தூரும் திகழ்ந்து வருவதற்காகவும், உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்திற்கு பெருமை

அகில இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களாக கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரம் மற்றும் சென்னை அண்ணா நகர் காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காவல் துறையினருக்கான பணித் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு அதிக பதக்கங்களுடன் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நமது காவல் துறையினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்றிலும் தவிர்க்க....

மதவாதம், பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களை பாதுகாக்கின்ற காவல் நிலையங்களில் இறப்பு ஏற்படுவது என்பது, மக்களிடையே காவல்துறை மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும். எனவே, காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை காவல் துறையினர் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமூக விரோதிகள் எவராயினும், பாரபட்சமின்றி சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் புரிந்து விட்டு உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு தப்பி ஓடும் பல நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன.

முன்னெச்சரிக்கை ...

இச்செயல்களுக்கு உடந்தையாக இருந்து, பரஸ்பரபுரிதலுடன் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் தமிழ்நாட்டில் உள்ள சமூக விரோத சக்திகளையும் ஒன்றாகக் கண்டறிந்து அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை தூண்டுவோர் குறித்த தகவல்களைச் சேகரித்து, உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பி, அதன் மீது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் சுணக்கம் காட்டுவதோ, காவல் நிலைய எல்லையைக் காரணம் காட்டி புகார்தாரர்களை அலைக்கழிப்பதோ கூடாது.

சிலை திருட்டை...

மக்களை பாதிக்கும் பொது விநியோக அரிசி கடத்தல், மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, போதை மருந்து கடத்துதல், பொருளாதார குற்றங்கள், சூதாட்டம், திருட்டு விசிடி, வீடியோ கேம்ஸ் போன்ற சமுதாய குற்றங்களின் மீது தனி கவனம் செலுத்தி, அக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலங்களில் சிலை திருட்டு தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றின் மீது தனிக் கவனம் செலுத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து, களவு போன சிலைகளை மீட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் பெற்றுத் தர காவல் துறையினர் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

ஒருங்கிணைந்து செயல்பட...

மேலும், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தும் கூட்டங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு, ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்து, எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து வகையிலும் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து வந்த போதிலும், ஒரு சில சமயங்களில் ஆங்காங்கு நடைபெறும் சில சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் தொய்வு ஏற்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, ஒரு சிலர் குறை கூற ஏதுவாக அமைந்து விடுகின்றது. அது போன்ற சம்பவங்களும் நடவாமல் தடுத்து, உங்கள் பணிகளை மேலும் சிறக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து