டெய்லர் 181 ரன்கள் குவிப்பு: 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி

புதன்கிழமை, 7 மார்ச் 2018      விளையாட்டு
Newzealand win 2018 3 7

டுனிடின் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ராஸ் டெய்லரின் அபாரமான ஆட்டத்தினால் 335 ரன்களை சேஸ் செய்துள்ளது. கடைசிவரை அவர் ஆட்டமிக்காமல் 181 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றி மூலம் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

பந்துவீச்சு தேர்வு...

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2 மற்றும் 3-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி நேற்று டுனிடின் மைதானத்தில் நடந்தது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 42 ரன்னில் அவுட் ஆனார்.


336 ரன் இலக்கு...

அதன்பின் பேர்ஸ்டோவ் (138 ரன்), ஜோரூட் (102 ரன்) சதம் அடித்தனர். அவர்களுக்கு பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் குறிப்பிடும்படியாக ஆடவில்லை. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் சோதி 4 விக்கெட்டும், போல்ட், முன்ரோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 336 ரன் என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் குப்தில், முன்ரோ இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் வில்லியம்சன் 45 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் ராஸ் டெய்லர்- டாம் லாதம் ஜோடி நிதானமாக விளையாடியது. அணியின் ஸ்கோர், 30 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் என்ற நிலையில் இருந்தது.

டெய்லர் அபாரம்...

நிதானமாக விளையாடிய டெய்லர் சதம் கடந்து இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார். டாம் லாதம் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த ஜோடியை குர்ரன் பிரித்தார். அவர் வீசிய 42-வது ஓவரில் டாம் லாதம் ஆட்டமிழந்தார். லாதம் 67 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 71 ரன்கள் குவித்தார்.

5 விக்கெட் வித்தியாசத்தில்...

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிராண்ட்ஹோம் 23 ரன்கள் சேர்த்தார். பின்னர் டெய்லருடன் நிக்கோல்ஸ் இணைய, இந்த ஜோடி இலக்கை எட்டியது. கடைசி ஓவரின் 3-வது பந்தில் குர்ரன் வீசிய பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் நிக்கோல்ஸ். 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 181 ரன்கள் விளாசிய ராஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று, போட்டித் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. 10-ம் தேதி நடைபெற உள்ள கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து