தமிழகத்தில் முதன் முதலாக பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வு தொடங்கியது

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தமிழகம்
plus 2

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதன் முதலாக பிளஸ்-1 அரசு தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு போல பிளஸ்-1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு இந்த வருடம் நடத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதனால் பிளஸ்-1 பாடத்திட்டம் முக்கியமானதாக கருதப்பட்டது. மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தனர். அரசு தேர்வு என்பதால் அதி கவனம் செலுத்தி படித்து வந்தனர்.

இந்த நிலையில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2795 மையங்களில் நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 7070 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். 1,753 பேர் தனித் தேர்வர்களாக எழுதினர். இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 406 பேர் மாணவிகள், 4 லட்சத்து 1509 பேர் மாணவர்கள் ஆவர்.


சென்னையில் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் 49,422 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு எழுதினர். இன்று (8-ந்தேதி) தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது. 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 13-ந்தேதி ஆங்கில முதல் தாளும், 14-ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளும் நடக்கிறது. இந்த ஆண்டு தமிழ் மொழியில் படித்து பிளஸ்-1 பொதுத் தேர்வை 5 லட்சத்து 14,498 மாணவர்கள் எழுதுகின்றனர்.

செல்போனுக்கு தடை

தேர்வு கண்காணிப்பு பணியில் 43,190 பேர் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்வையொட்டி 296 கட்டுபாட்டு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4000 பறக்கும் படை முதன்மை கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்துக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

30-ல் ரிசல்ட்

மீறுவோர் மீது தேர்வுத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளது. பொதுத்தேர்வில் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையம், பள்ளி அங்கீகாரம் ஆகியவை ரத்து செய்யப்படும் என அரசு தேர்வு இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து