ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை ரத்து செய்தது அமெரிக்க அருங்காட்சியகம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      உலகம்
Aung San Suu Kyi 2018 3 8

வாஷிங்டன் : மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்தது.

அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூகிக்கு எல்லி வெய்ஸல்  என்ற உயரிய விருதினை வழங்கியது. இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அந்த விருதினை ரத்து செய்வதாக அருங்காட்சியகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மரில் ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் படுகொலையின்போது, ஆங் சான் சூகி கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்தமைக்காகவே விருதினை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது.


ஆங் சான் சூகியின் தேசிய லீக் ஜனநாயகக் கட்சி, இந்த இனப்படுகொலையைக் கண்டிக்கத் தவறியது, தடுக்கத் தவறியதோடு ஐ.நா., விசாரணைக் குழுவினருக்கும் ஒத்துழைப்பும் அளிக்கவில்லை எனவும் விருதை ரத்து செய்தது தொடர்பாக அருங்காட்சியம் விளக்கியுள்ளது.

அதேபோல், ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பதிவு செய்ய வந்த பத்திரிகையாளர்கள் மீதும் அடக்குமுறையை ஏவிவிட்டதாக ஆங் சான் சூகி மீது அந்த அருங்காட்சியகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டபோது ஆங் சான் சூகி மீது பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து