ஜி.எஸ்.டி ரிட்டன் தாக்கல் இனிமே ஒரே படிவத்தில் செய்யலாம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
gst

புதுடெல்லி, ஜி.எஸ்.டி மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்யும் ஜி.எஸ்.டி.ஆர்-1, 2, ஜி.எஸ்.டி.ஆர்-3பி என்ற கடினமான முறை மாற்றியமைக்கப்பட்டு மிக எளிமையான ஒரே ஒரு ரிட்டன் மட்டும் தாக்கல் செய்யும் முறை வரும் நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

ஜிஎஸ்டி வரிமுறைக்கு முந்தைய வாட் வரி விதிப்பு முறையில் அனைத்து விபரங்களையும் ஒரே படிவத்தில் பூர்த்தி செய்து விரைவில் மாதாந்திர படிவம் தாக்கல் செய்து வந்தனர்.

அந்த படிவங்கள் அனைத்தும் மிக எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்ததால், வர்த்தகர்களும் மற்றும் தொழில்துறையினரும் மிக விரைவாக தங்களின் மாதாந்திர படிவங்களையும் நிகர வரியையும் செலுத்தி வந்தனர். இதனால் கால தாமதம் ஆவது தவிர்க்கப்பட்டு வந்தது.


ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்பு, மாதாந்திர கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி செலுத்துவதற்கான படிவங்கள் மூன்று விதமாக இருந்து வருகிறது. இந்த மூன்று விதமான படிவங்களையும் நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப அனைத்து விதமான ஆவணங்களையும் தயார் செய்துகொண்டு, மாதாந்திர கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப் பயன்பாடு மற்றம் நிகர வரி ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கு கால தாமதம் ஏற்படுகின்றது.

மாதாந்திர படிவங்கள் தாக்கல் செய்வதற்கு கால தாமதம் ஏற்படுவதால், அரசுக்கு வரவேண்டிய வரியும் முறையாக சென்றடைவதில்லை. இதனால் இதில் கவலைப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இன்னும் சில வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் தங்களின் ஜூலை முதல் ஜனவரி மாதம் வரையிலான மாதாந்தி படிவங்களை தாக்கல் செய்ய முடியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.

வர்த்தகர்கள், தொழில்துறையினரின் சிரமங்களை தீவிரமாக ஆராயந்த ஜிஎஸ்டி ஆணையம் விரைவில் மாதாந்திர ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் படிவங்களை எல்லாம் நீக்கி விட்டு அதற்கு பதிலாக வாட் வரி விதிப்பை போல, ஒரே ஒரு படிவம் மட்டுமே தாக்கல் செய்யும் வகையில் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது நடைமுறைக்கு வரும் என்று கடந்த 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி படிவங்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தும் பணியானது, ஆதார் திட்டத்தின் தலைவரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவருமான நந்தன் நிலேகேனி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களை எல்லாம் ஆராய்ந்து அதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை எல்லாம் நிவர்த்தி செய்து புதிய ஜிஎஸ்டி படிவத்தை தயார் படுத்தி உள்ளதாக தெரிகிறது,

புதிய ஜிஎஸ்டி படிவம் வரும் 10ம் தேதி நடக்கவிருக்கும் 26வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு, வெகு விரைவில், அதாவது வரும் 2018-19ம் நிதியாண்டிலிருந்து அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நந்தன் நிலேகானி உருவாக்கியுள்ள புதிய ஜிஎஸ்டி படிவத்தில், தற்போது உள்ள மூன்றுவிதமான படிவங்களைப் போல இல்லாமல், விற்பனை விபரத்தை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றினால் போதும்.

இந்த அடிப்படை தகவல்களை வைத்தே நொடியில் மாதாந்திர ஜிஎஸ்டி படிவத்தை ஜிஎஸ்டி இணையதளமே தயார் செய்துவிடும். இதனால் வர்த்தகர்களுக்கும், தொழில் துறையினருக்கும் ஏற்படும் கால தாமதம் குறையும்.

ஜிஎஸ்டி படிவங்களை மாற்றி அமைக்கவிருப்பதால், அதனோடு தொடர்புடைய புதிய இ-வே பில் நடைமுறையும் மேலும் ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இதுபற்றி விளக்கிய ஜிஎஸ்டி ஆணையத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆணையர் எம்.ஸ்ரீநிவாஸ், புதிய ஜிஎஸ்டி படிவம் பற்றிய திட்டம் வரும் 10ம் தேதி நடக்கவிருக்கும் 26வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து