இந்தோனேஷியாவில் விலங்குகளும் சிகரெட் அடிமை

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      உலகம்
smoking-animal 2018 03 08

ஜகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில், உராங்கொட்டான் குரங்கொன்று புகைபிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகில் புகைப்பழக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தோனேசியா. இந்நிலையில் அங்கு மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது வீடியோ. தென்கிழக்கு ஜகார்டாவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பன்தங்கு மிருக காட்சிசாலை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்த பார்வையாளர் ஒருவர், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 22 வயது உராங்கொட்டான் குரங்குக்கு தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை தூக்கி எறிந்துள்ளார்.

அதை லாவகமாக பிடித்த அந்த குரங்கு, தேர்ந்த புகைப்பிடிப்பாளரைப் போல வாயில் வைத்து புகைத்து தள்ளியுள்ளது. இதை வீடியோ எடுத்து பார்வையாளர்கள் சிலர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அதே நேரத்தில், இந்தோனேசியாவில் மிருகங்களின் பாதுகாப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்திருப்பதாக விலங்கியல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  பார்வையாளர்கள் விலங்குகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை தரக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தாலும் அதை யாரும் கடைபிடிப்பதில்லை என பன்தங்கு மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். சம்மந்தப்பட்ட பாதுகாப்பு அலுவலர், அந்த நேரத்தில் இளைப்பாற சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


 இந்தோனேசிய மிருகக் காட்சி சாலைகளில், விலங்குகள் புகைபிடிப்பது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2012ம் ஆண்டு, மற்றொரு மிருகக்காட்சிசாலையில், இதேபோன்று ஒரு உராங்கொட்டான் குரங்கு புகைப்பழக்கத்துக்கு அடியாகி இருந்தது. பின்னர் அது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது .

தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பன்தங்கு மிருகக்காட்சி சாலையை மூட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை எழுந்தது. இங்கு எலும்பும், தோலுமாக உருக்குலைந்து இருந்த கரடிகள், ஒரு கட்டத்தில் தனது மலத்தை எடுத்து சாப்பிடும் அவல வீடியோ கடந்தாண்டு சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த மிருகக்காட்சி சாலையை மூட வேண்டும் என்று விலங்குகள் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து