எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 4-வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
parliament 2018 3 6

புது டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருதல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி ஆகியவற்றால் பாராளுமன்றம் கடந்த 3 தினங்களாக முடங்கியது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்ட கூட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த பிரச்சினைகளுக்காக கடந்த 3 தினங்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 4-வது நாள் கூட்டம் நேற்று தொடங்கியதும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து அ.தி.மு.க. தெலுங்குதேசம், டி.ஆர்.எஸ். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. உறுப்பினர்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டனர். வங்கி மோசடி விவகாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிளப்பினர். இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று டி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இந்த அமளி காரணமாக சபையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து சபாநாயகர் நண்பகல் 12 மணி வரை சபையை ஒத்தி வைத்தார். மீண்டும் ஏற்பட்ட அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றம் 4வது நாளாக நேற்று முடங்கியது. டெல்லி மேல்சபையிலும் உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். கூச்சல் குழப்பம் காரணமாக பிற்பகல் 2 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து