நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி: முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்பு - 11 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
Neipu Rio 2018 3 8

கோஹிமா : நாகாலாந்து மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. முதல்வராக நெய்பியூ ரியோவும், துணை முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த ஒய்.பட்டானும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். கவர்னர் ஆச்சார்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வரும் 16-ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

29 இடங்களில் வெற்றி...

நாகாலாந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி- பா.ஜ.க கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றியது. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 16 இடங்களிலும், பா.ஜ.க. 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான நாகா மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கவர்னர் அழைப்பு

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி- பா.ஜ.க. கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியதால் ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால், நாகா மக்கள் கட்சியோ, அதிக இடங்களில் வென்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதால் தங்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.  இந்நிலையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். வரும் 16-ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார்.

பதவியேற்பு விழா

அதன்படி,  கோஹிமாவில் நேற்று பொதுமக்கள் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்றார். பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒய்.பட்டான் துணை முதல்வராக பதவியேற்றார். இவர்களுடன் 10 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பி.பி.ஆச்சார்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சர்கள்...

பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேகாலயாவில் சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் கான்ராட் சங்மா, அருணாச்சல் முதல்வர் பேமா காண்டு, அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

நான்காவது முறையாக...

நெய்பியூ ரியோ நான்காவது முறையாக நாகாலாந்தின் முதல்வராகி உள்ளார். இதற்கு முன், 2003-ம் ஆண்டில் இருந்து 2014 வரை மூன்று முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். நாகாலாந்தில் அடுத்தடுத்து மூன்று முறை முதல்வராக இருந்த ஒரே தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து