போராட்டம் நடத்திய காங். எம்.எல்.ஏக்களிடம் பகோடா வாங்கிய அரியானா முதல்வர் கத்தார்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
Manohar Lal Khattar 2018 3 8

சண்டிகர் : அரியானா சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பகோடா வாங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தினார் முதல்வர் மனோகர்லால் கத்தார்.

பகோடா விற்பனை மூலம் ஒருவருக்கு வேலை கிடைக்கிறது என்றால் அது நல்ல விஷயம். அவர்களுக்கு (காங்கிரஸார்) இப்போது வேலை இல்லை. அதனால் பகோடா விற்கிறார்கள். இது நல்ல விஷயம்தானே. - அரியானா முதல்வர் மனோகர்லால் கத்தார்

அரியானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, அந்த வளாகத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பகோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சட்டசபைக்கு சென்று கொண்டிருந்த முதல்வர் மனோகர்லால் கத்தார், அவர்களிடம் பகோடா வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பின்னர் இதுகுறித்து கத்தார் கூறும் போது, பகோடா விற்பனை மூலம் ஒருவருக்கு வேலை கிடைக்கிறது என்றால் அது நல்ல விஷயம். அவர்களுக்கு (காங்கிரஸார்) இப்போது வேலை இல்லை. அதனால் பகோடா விற்கிறார்கள். இது நல்ல விஷயம்தானே என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கரண் சிங் தலால் கூறும்போது, “வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசும், அரியானா அரசும் உறுதி அளித்திருந்தன. ஆனால், இப்போது அவர்கள் வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை பகோடா விற்கச் சொல்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது என்றார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து