ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய மூதாட்டிக்கு பிரதமர் மோடி புகழாரம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
pm-modi praise old woman 2018 3 8

புது டெல்லி : ஸ்வாச் பாரத் திட்டம் இருக்கும் வரை ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய மூதாட்டி குன்வர்பாயின் பங்களிப்பை மறக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

இந்தியாவில் ஏராளமான பெண்கள் மனிதநேயம் எனும் வரலாற்றில் தங்களது தியாகத்தின் மூலம் மறக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். இன்று நான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் ஸ்வச் பாரத் திட்டத்துக்கு முன்னோடியாக இருந்தவர் சத்தீஷ்கர் மாநிலம், கோத்தாபாரி கிராமத்தைச் சேர்ந்த குன்வர் பாய் என்ற 106 வயது மூதாட்டி. தனது முதிய வயதிலும் தனக்கு இருந்த ஒரே சொத்தான ஆடுகளை விற்பனை செய்து அவர் இரண்டு கழிப்பறைகள் கட்டினார். இன்று அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரின் தியாகம் நினைவில் இருக்கிறது. ஸ்வச் பாரத் திட்டம் இருக்கும்வரை குன்வர் பாயின் பங்களிப்பை மறக்க முடியாது. அவரின் பங்களிப்பு என்னை நெகிழச் செய்கிறது. சத்தீஷ்கர் மாநிலத்துக்கு நான் சென்றிருந்த பொழுது குன்வர் பாயிடம் ஆசிபெறும் வாய்ப்பு கிடைத்தது. மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்புடன் செயல்படும் அனைவரின் மனதிலும், சிந்தனையிலும், எப்போதும் குன்வர் பாய் வாழ்ந்து கொண்டு இருப்பார். குன்வர் பாய்தான் என்னை ஈர்த்தவர் என்று பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து