மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: தேடப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி பரூக் தக்லா கைது

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
dawood-farooq takla 2018 3 8

புது டெல்லி : மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியும், தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியுமான பரூக் தக்லா நேற்று கைது செய்யப்பட்டார்.

தொடர் குண்டுவெடிப்பு

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 257 பேர் உயிரிழந்தனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர். ரூ.27 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. இந்த வழக்கில் ஏற்கெனவே யாகூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு கடந்த 2007-ல் தண்டனை விதிக்கப்பட்டது. யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட முஸ்தபா தோசா, அபு சலீம் மற்றும் கரீமுல்லா கான், பிரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்ச்சன்ட் ஆகியோர் மீதான வழக்கு தனியாக நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் தலைமறைவாக உள்ளனர்.


துபாயில் கைது...

இந்நிலையில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி பரூக் தக்லா நேற்று கைது செய்யப்பட்டார். துபாயில் கைது செய்யப்பட்ட தக்லா பின்னர் நேற்று காலை டெல்லி கொண்டு வரப்பட்டார். அவரது முழு பெயர் முஸ்தக் முகமது மியா என்ற பரூக் தக்லா (வயது 57). மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின்னர் துபாய் தப்பிச் சென்ற தக்லா அங்கிருந்து பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. தக்லாவை மும்பை நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து