முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைகளைக் கைப்பற்றி கிழக்கு கெளட்டாவை மூன்றாகத் துண்டித்தது சிரியா ராணுவம்

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்: கிழக்கு கெளட்டாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதிகளிலிருந்து முக்கிய இரு நகரங்களுக்குச் செல்லும் வழியை சிரியா ராணுவம் கைப்பற்றியது.

இதன் மூலம், கிழக்கு கெளட்டாவின் கிளர்ச்சியாளர் பகுதி மூன்றாகத் துண்டிக்கப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது: கிழக்கு கெளட்டா பகுதியின் மிகப் பெரிய நகரமான டூமா மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹராஸ்தா ஆகிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதியோடு இணைப்பதற்கான சாலைகளை
சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், கிழக்கு கெளட்டா பகுதியை டூமா, ஹராஸ்தா மற்றும் எஞ்சிய பகுதி என்று சிரியா ராணுவம் மூன்றாகப் பிரித்துவிட்டது என்றார் அவர்.

இதற்கிடையே, டூமா நகரில் அரசுப் படைகள் விமானங்கள் மூலமும், எறிகணைகளைக் கொண்டும் சனிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த கடந்த 2012-ஆம் ஆண்டில், கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அதிலிருந்து இந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

எனினும், கடந்த ஓராண்டாக மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டில் இழந்த கிழக்கு கெளட்டா பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை ராணுவம் மீட்டது.

இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள பகுதியை மீட்கும் முயற்சியாக, சுமார் 4 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களையும், எல்லைக்கு அப்பாலிருந்து எறிகணைத் தாக்குதல்களையும் நிகழ்த்தின.

இந்தத் தாக்குதல்களில் 975-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாவும், உயிரிழந்தவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் எனவும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், நிவாரணப் பொருள்களை கிளர்ச்சியாளர்கள் பகுதிக்குக் கொண்டு செல்ல முடியாமல் பல நாள்கள் மோதல் நீடித்து வந்த நிலையில், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள வஃபிதீன் எல்லைச் சாவடி வழியாக ஐ.நா., சிரியா அரபு செம்பிறைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் கிழக்கு கெளட்டா பகுதி மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வெள்ளிக்கிழமை விநியோகித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து