முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: புளோரிடாவில் சட்டம் நிறைவேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

பார்க்லாண்ட்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளித்தும், துப்பாக்கிகளை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21-ஆக உயர்த்தியும் அந்த மாகாண அரசு சட்டம் நிறைவேற்றியது.

புளோரிடா மாகாணம், பார்க்லாண்ட் நகரிலுள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் பள்ளியில் நிக்கோலஸ் ஜேக்கப் குரூஸ் என்ற முன்னாள் மாணவர் கடந்த 14-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இந்தத் தாக்குதலில் 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பலியாகினர்.

இந்த நிலையில், பள்ளிகளில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, துப்பாக்கி வைத்திருப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 21-ஆக அதிகரிப்பதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார்.

மேலும், மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஆசிரியர்கள் வகுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை வழங்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த இரு அம்சங்களையும் கொண்ட சட்ட மசோதாவை புளோரிடா நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது.

எனினும், "மெஜாரிடி ஸ்டோன்மென் டக்ளஸ் பள்ளி பொதுப் பாதுகாப்புச் சட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட்டின் ஒப்புதலைப் பெறுமா என்று சந்தேகம் நிலவி வந்தது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான ரிக் ஸ்காட், துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது.

இந்தச் சூழலில், புதிய வரைவு மசோதாவில் ஆளுநர் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதையடுத்து, அந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து