முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

Kurangani Rescue: குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ மீட்பு பணிகள் தீவிரம்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

போடி, மார்ச் 11: தேனி மாவட்டம், போடி அருகே கொழுக்குமலை குரங்கனி வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 40 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில், 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போடி மேற்கு மலை வனப் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேல் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. வறட்சியால் வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு பரவி வருவதாகவும், வனப் பகுதியில் மரம் வெட்டுவதற்காக சமூக விரோதிகள் தீ வைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காட்டுத் தீயை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் வனத் துறை மேற்கொண்ட மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன் வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பது குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மலையேற்றப் பயிற்சி:

இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் போடி மேற்கு மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள், தலா 7 முதல் 8 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து கொழுக்குமலைப் பகுதியில் இருந்து, குரங்கணி நோக்கி வனப் பகுதியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுடன் வழிகாட்டியாக 4 பேர் சென்றுள்ளனர்.

காட்டுத் தீ:

மலையேற்றப் பயிற்சியை தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிற்பகல் சுமார் 4 மணிக்கு, கொழுக்குமலை வனப் பகுயிலில் இருந்து ஏற்பட்ட காட்டுத் தீயில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரும் சிக்கினர். இந்தத் தகவல் செயற்கைகோள் புகைப்படத்தின் மூலம் வனத் துறைக்கு கிடைத்துள்ளது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனுக்கு வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணி:

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது. தீயணைப்பு துறையினர், வனத் துறையினர், காவல் துறையினர், மலைகிராம மக்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், காட்டுத் தீயில் இருந்து தப்பி வந்த திருப்பூரைச் சேர்ந்த சவரணன் மகள்கள் சாதனா(11), பாவனா(12), அங்கமுத்து மகன் ராஜசேகர்(29), ஈரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் மேகா(9), பிரபு(30), சென்னை குரோம்பேட்டைய் சேர்ந்த கல்யாணராமன் மகள் சஹானா(20), வேளச்சேரியைச் சேர்ந்த பியூஸ் மனைவி பூஜா குப்தா(27), மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தனபால் மகள் மோனிஷா(30) முடிச்சூரைச் சேர்ந்த விஜயலட்சுமி(29), வடபழனியைச் சேர்ந்த நிவேதா(20 ஆகியோர் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிக்கு ஏற்பாடு:

வனப் பகுதியில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பீய்ச்சி காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது குறித்தும், காட்டுத் தீ பரவாத பகுதிகளில் பாதை அமைத்து வனப் பகுதிக்குள் ஊடுவிச் செல்வது குறித்தும் அதிகாரிகள் ஆலேசானையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படை சார்பில் அனுப்பி வைக்கப்படிருந்த ஹெலிகாப்டர் சிக்கனல் பிரச்சையால் வனப் பகுதியில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

எஞ்சியவர்களின் நிலை என்ன?:

வனப் பகுதிக்குள் தனித் தனி குழுவாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள், காட்டுத் தீக்கு தப்பி திசை தெரியாமல் ஓடியதால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்த கவலை எழுந்துள்ளது. இரவிலும் டார்ச் விளக்கு ஒளி மூலம் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் போடியில் முகாம் அமைத்து மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறார். திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோர் குரங்கணி மலைப் பகுதிக்குச் சென்று மீட்பு பணியை பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்