முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதர்களின் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பயன்படும் பன்றிகளை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ :  மனிதர்களின் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பயன்படும் வகையில், வைரஸ் தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான பன்றிகளை உருவாக்கி மருத்துவத் துறையில் புதிய சாதனை புரிந்துள்ளனர்

ஜப்பான் விஞ்ஞானிகள்.

பல்வேறு காரணங்களால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடுபவர்களுக்கு ஆரோக்கியமான மற்றொரு நபரிடம் இருந்து தேவையான உறுப்புகள் தானமாகப் பெறப்படுவது நடைமுறையில் உள்ளது. சிறுநீரகம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட உறுப்புகளை மட்டுமே தானமாகத் தரும் சம்பந்தப்பட்டப் பட்ட நபர் உயிரோடு இருக்கும்போது தர இயலும். மற்ற உறுப்புகளை மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்தும், உயிரிழந்தவர்களிடமிருந்துமே தானமாக பெற இயலும். இதனால் உடல் உறுப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நோயாளிகள் உரிய நேரத்தில் உறுப்பு தானம் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடுகிறது.

இதற்கு மாற்றாக பன்றிகளிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. ஏற்கனவே நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல நாடுகலில் 200க்கும் மேற்பட்டோருக்கு பன்றிகளின் உடல் உறுப்புகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன. பன்றிகளின் உடல் உறுப்புகள் மனிதர்களின் உறுப்புகளுடன் ஒத்துப் போவதால் இத்தகைய ஆபரேசன்கள் சாத்தியமாகிறது.ஆனால், இந்த சிகிச்சையால் பன்றியிடமிருந்து உறுப்பு தானம் பெற்ற நபர் 40 விதமான வைரஸ் கிருமிகளின் தாக்கத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதனால் பன்றிகளிடமிருந்து உறுப்புகளைப் பெற நோயாளிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் கண்டுபிடிப்பு ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் நிகழ்த்தி உள்ளனர். அதாவது விசேஷமாக அதற்கென்றே உருவாக்கப்பட்ட பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு உடல் உறுப்புகளைப் பெறுவது தான் அது. ஜப்பான் மெய்ஜி பல்கலைக்கழகம் மற்றும் கியோடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஜப்பான் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறைகளின் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறையின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தற்போது பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் முதல்கட்டமாக கர்ப்பமாக இருந்த மூன்று பன்றிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, அவற்றின் மூலம் நோய் விளைவிக்கும் வைரஸ்கள் இல்லாத நல்ல நிலையில் உள்ள பன்றிக்குட்டிகள் உருவாக்கப் பட்டன. பின்னர் அவை செயற்கையாக பாலூட்டி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டன. அவை 1.8 கிலோ எடை வந்தவுடன் நடத்தப்பட்ட ஆய்வில், அவற்றின் உடல் உறுப்புகள் வைரஸ் தாக்குதல் அபாயம் இல்லாததாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், நோய்த்தாக்குதல் அபாயம் இல்லாமல் அவற்றை மனிதர்களுக்கு வெற்றிகரமாக பொருத்த இயலும். இந்த ஆய்வு வெற்றி பெற்றுள்ளதால் வைரஸ் தாக்குதல் பயமில்லாத உறுப்பு தானம் இனி சாத்தியம் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து