கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் பழுது சரி செய்யப்பட்டதால் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

மின் உற்பத்தி  தொடக்கம்

 நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.இதைத் தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த இரு அணு உலைகளில் இருந்தும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அவை நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி 2-வது அணு உலையில் நீராவி செல்லும் குழாயில் வால்வு பழுதானது. இதனால் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி காலை 9.15 மணியளவில் திடீரென முதலாவது அணு உலையிலும் பழுது ஏற்பட்டது. நீராவி கொள்கலன் வால்வில் ஏற்பட்ட பழுதினால் முதல் அணு உலையிலும் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரு அணு உலைகளுமே இயங்காததால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.இதையடுத்து இரு அணு உலைகளிலும் பழுது நீக்கும் பணியை இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இரவு, பகலாக இந்த பணி நடந்தது. இதையடுத்து முதல் அணு உலையில் நேற்று மாலையில் பழுது சரி செய்யப்பட்டதால், அதில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. நேற்று மாலை 6.15 மணியளவில் தொடங்கிய மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஞாயிற்றுக்கிழமை இரவு மின் உற்பத்தி 200 மெகாவாட்டை எட்டியது. திங்கட்கிழமை அதிகாலை முதல் அணு உலையில் 350 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஓரிரு நாளில் முழுமையான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.இதனிடையே 2-வது அணு உலை பழுது நீக்கும் பணி வேகமாக நடை பெற்று வருகிறது. பழுது சரி செய்யப்பட்டு ஓரிரு நாளில் இந்த அணு உலை செயல்பட தொடங்கும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து