முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மானம் காத்த மலைவாழ் மக்கள்: வைரலாகும் உறவினரின் நெகிழ்ச்சி பதிவு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்களது ஆடைகளை அளித்து அவர்களது மானம் காத்த மலைவாழ் மக்களை சமூக வலைதளத்தில் உறவினர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குரங்கணி மலைப்பகுதியில் டிரக்கிங் சென்றவர்களில் அதிகமானோர் பெண்களே. காட்டுத் தீ திடீரென பற்ற தப்பிக்க வழியில்லாமல் தீயில் சிக்கி கருகினர். இதில் பெண்களே அதிகம் தீயில் சிக்கினர். அவர்களைப் பற்றிய தகவல்கள் வாட்ஸ் அப்பில் செய்தியாக வந்தபோது உடைகள் எரிந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மீது போர்வையை போர்த்தியபடி கிடந்தனர்.

அனைத்து துணிகளும் எரிந்த போது இவர்களுக்கு பெட்ஷீட் மட்டும் எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. ஆனால் அதற்கான விடை மலைவாழ் மக்களின் அர்ப்பணிப்புமிக்க உதவியால் என்பது தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த மலைவாழ் மக்களின் உதவி குறித்து வலைதளங்களில் பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினர் நெகிழ்ச்சியுடன் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

குரங்கணி தீ விபத்தில் மாண்டோர் மாண்டு விட்டனர், மீண்டோர் மீண்டு விட்டனர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்களின் உடைகளையும், உணவுப் பொருட்களையும் மீட்புக் குழுவினருக்கும் அங்கு தீயில் சிக்கியவர்களுக்கும் செலவிட்ட அப்பாவி மலைவாழ் மக்களைப் பற்றி எந்த டி.வி சேனலும் ஒரு வார்த்தை கூட பேசவோ, அம்மக்களுக்கு நன்றி தெரிவிக்கவோ மனமில்லாமல் போனது. எங்கள் குடும்பம் சார்பாக சாஸ்டாங்க நமஸ்காரங்களையும், அந்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகளையும் இங்கு பதிகிறேன். நிச்சயம் அப்பகுதி மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை இன்னும் சில நாட்களில் செய்ய ஏற்பாடு செய்வோம் என உறுதியளிக்கிறேன். நம் பிள்ளைகள் மீது போர்த்தி கூட்டி வந்த அத்தனை துணிகளும், தூளி கட்டி தூக்கி வந்த பெட்ஷீட்டுகளும், காட்டிலும் மேட்டிலும் கடுமையாக உழைத்து கஷ்டப்பட்டு அவர்கள் வாங்கி வைத்தவைதானே.

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் இவர்கள் உள்ளே சென்று மீட்புப் பணியை முடுக்கிய பின்னர்தான் செய்தி சேனல்கள் குரங்கணி பக்கம் திரும்பியது. அம்மக்களின் நல்லெண்ணத்திற்கும், அன்பிற்கும் ஈடாக நம்மால் ஆனதை இணைந்து செய்வோம். அவர்களுக்கான அடிப்படை தேவைகள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து சில இளைஞர்களை மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளும் நலமுடன் திரும்ப உதவிய உள்ளங்களுக்கு நம்மால் ஆன சிறு உதவியேனும் செய்ய வேண்டும்.

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பெரிதும் உதவிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுகள். தேனி பெரியகுளம் பகுதியிலிருந்து யாரேனும் உண்மையான தொண்டுள்ளம் படைத்தவர்கள் முன் வந்தால் அவர் மூலமாக அனைவரும் சேர்ந்து இந்த நல்ல காரியத்தை செய்யலாம் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து