முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் தனியார் விமானம் விழுந்து 11 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டெஹரான் : ஈரானில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த எட்டு பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துருக்கியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகள் மினா பாஸரன். இவர் தனது ஏழு தோழிகளுக்கு விருந்து கொடுப்பதற்காக 'பாம்ரைடர் சாலஞ்ஜர் 604' ரக விமானத்தில் பயணம் செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் புறப்பட்ட அந்த விமானம் இஸ்தான்புல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தென்மேற்கு ஈரான் நிலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.06 மணி அளவில்  விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மினா பஸரன் அவரது தோழிகள் ஏழுபேர் மற்றும் விமான சிப்பந்திகள் மூவர் ஆகிய 11 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பாக, விமான நிலைய தரைத்தள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அதன் விமானி தொழில்நுட்ப காரணமாக விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அதற்குள் அந்த விமானம் ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தெற்கு டெஹ்ரானிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளான ஜாக்ரோஸ் மலைப்பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் பலியான 11 பேரது உடல்களையும் மீட்புக் குழுவினர் கண்டறிந்து அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஒன்பது பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இருவரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போயுள்ளதால் அவற்றை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

துருக்கியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஹுசைன் பாஸரனின் 28 வயது மகள் மினா பாஸரன். இவர் பல நாள்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது தோழிகளுடன் தங்கியிருந்துள்ளார்.  அடுத்த மாதம் மினாவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், விருந்து நிகழ்ச்சிக்காக அவர்கள் அனைவரும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். உயிரிழந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார் என துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து