முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டியை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் கடத்திய விமானத்தை சுட்டு வீழ்த்தச் சொன்னேன்: புடின் ஒப்புதல்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவி்ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நீண்ட காலமாக சக்தி வாய்ந்த தலைவராக அதிபர் புடின் இருந்து வருகிறார். வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புடின் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 2 மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் புடின் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இதில் அரசு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆன்ட்ரே கொன்ட்ரஷோவ், புடினிடம் பேட்டி எடுக்கிறார். இந்தப் பேட்டியில் புடின் கூறியதாவது,

2014-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி சொச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த போது, ஒலிம்பிக் பாதுகாப்புத் துறை தலைமையகத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ராணுவ அதிகாரி, உக்ரைனின் கார்கிவ் நகரிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு சென்று கொண்டிருந்த ஒரு விமானம் நடுவானில் கடத்தப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் விமானத்தை சொச்சி நகரில் தரையிறக்குமாறு மிரட்டுகிறார்கள். அதில் 110 பயணிகள் இருக்கிறார்கள். கடத்தல்காரர்கள் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்றார்.

இதையடுத்து, சொச்சி நகரில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்க வாய்ப்பிருப்பதால், என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுங்கள் (சுட்டு வீழ்த்துங்கள்) என்று ராணுவத்துக்கு உத்தரவிட்டேன். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த அதிகாரியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. விமானம் கடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவல் தவறானது. ஒரு குடிகாரரின் தந்திரம்தான் இது. அந்த விமானம் இஸ்தான்புல் நகரில் திட்டமிட்டபடி பத்திரமாக தரையிறங்கிவிட்டது என அந்த அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு புடின் தெரிவித்தார்.

ஆவணப்படத்தில் புடின் கூறியுள்ள இந்தத் தகவலை அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதி செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து