முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் 29-ம் தேதிக்கு பிறகு அடுத்த நடவடிக்கை - சட்டசபையில் துணை முதல்வர் ஒ.பி.எஸ். தகவல்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விவகாரத்தில் வரும் 29-ம் தேதிக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பிரச்னை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில், கடந்த 22-ம் தேதியன்று அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டி, அதில் அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு, பிரதமரை சந்தித்து அழுத்தம் தருவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்ற காரணத்தால், சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இதுவரை பிரதமர் அனைத்துக்கட்சித்  தலைவர்களை சந்திக்கவில்லை.

நம்பிக்கையில்லா...

இதுவரை அரசுக்கு எந்தவொரு தகவலும்  வந்திருக்கிறதா என்ற நிலையில், பக்கத்தில் இருக்கின்ற ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டுமென்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி அழுத்தம் தந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதனை ஆதரிப்பதாகவும் அறிவித்து, மாநில உரிமையை பெறுவதில் அவர் தருகின்ற அழுத்தத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

9 நாட்கள் மட்டுமே...

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கின்ற காலக்கெடு 6 வாரம். வரும் 29-ம் தேதியோடு அது முடிவடைகிறது. இடையில் 9 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே, மாநில உரிமையை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்த அரசு ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.

அடுத்த நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

காவிரி நீர் பெறுவது தொடர்பாக நாம் பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிம். உச்சநீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில் நான்கு மாநில தலைமை செயலாளர்கள் கூட்டிய கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட தலைமை செயலாளர் அரசின் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துவைத்துள்ளார். 29-ம் தேதி வரை நமக்கு நேரம் இருக்கிறது. அதற்கு பின்னர் அடுத்த நடவடிக்கை குறித்து பிறகு முடிவு எடுப்போம்.

மாய தோற்றத்தை...

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதவகையில் கடந்த 10 நாட்களாக நாடளுமன்றத்தை அ.தி.மு.க எம்.பி.க்கள் முடக்கியுள்ளனர். ஆந்திர மாநில முதல்வர் எடுத்த முடிவிற்கும் இங்கு உள்ள பிரச்சனைக்கும் முடிச்சு போட கூடாது. அவர்கள் மத்திய அமைச்சரவையில் நான்கு ஆண்டுகள் அங்கம் வகித்தார்கள். எதிர்கட்சி தலைவர் ஆந்திர மாநில முதல்வர் தன்னுடைய மாநில நலனுக்காக பேராடுகிறார். நாம் போராடவில்லை என்பதுபோல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அந்த மாயதோற்றம் எடுபடாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சனையில் எடுத்த தீர்க்கமான முடிவை அரசு தொடர்ந்து  கடைபிடிக்கும். பொறுமையாக இருப்போம். 29-ம் தேதிக்கு பிறகு மீண்டும் அனைவரும் ஒன்றுகூடி முடிவு எடுப்போம். என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து