முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகன சோதனையில் பெண் இறந்த விவகாரம்: விசாரணைக்கு பிறகு நடவடிக்கை ; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 21 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் பெண் இறந்தது தொடர்பான வழக்கில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த விவகாரத்தில் குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டு முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கவனஈர்ப்பு தீர்மானம்

தமிழக சட்டசபையில், திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண் தவறி விழுந்து இறந்தது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரும் காங்கிரஸ் உறுப்பினர் கே.ஆர் ராமசாமி ஆகியோர் கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

வாகன சோதனை...

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகில், 7.3.2018 அன்று இரவு, திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, தஞ்சாவூர் சாலையில் திருச்சி நோக்கி தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்றை ஆய்வாளர் நிறுத்தி, அவ்வாகனத்தின் சாவியை எடுத்துள்ளார். அவ்வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலத்தைச் சேர்ந்த. ராஜா என்பவர், தான் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பதாகவும், சாவியைத் தருமாறும் கேட்டதால் ஆய்வாளர் சாவியைக் கொடுத்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்து...

காவலர்கள் எதிர்பாராத சமயத்தில், ராஜா தனது வாகனத்தை தனது மனைவியுடன் வேகமாக அவ்விடத்தை விட்டு ஓட்டிச் சென்றுள்ளார். உடனே காவல் ஆய்வாளர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்னால் விரட்டிச் சென்று, பாரத மிகு மின் நிலையம், கணேசா ரவுண்டானா அருகில் வேகமாக சென்று கொண்டிருந்த ராஜாவை நிறுத்திய போது, ராஜா கட்டுப்பாட்டை இழந்து அவரும், பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷாவும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இருவரையும் துவாக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு மருத்துவர்கள் உஷா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜா வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

சாலை மறியலில்...

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 2,000 பேர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து கல் வீச்சில் ஈடுபட்டனர். இக்கல்வீச்சு சம்பவத்தில் 44 அரசுப் பேருந்துகள், 6 காவல் வாகனங்கள், ஒரு வருவாய்த் துறை வாகனம் ஆகியவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. ஒரு பெண் காவலர் உட்பட 11 காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வேறு வழியின்றி தகுந்த எச்சரிக்கைக்கு பின், குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து, அவர்களை கலைந்து போகச் செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

21 நபர்கள் கைது

உஷா இறந்து போனது தொடர்பாக காவல் நிலையத்தில் உஷாவின் கணவர். ராஜா அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304(2), 336ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டு கல் வீசி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.  உயிரிழந்த உஷாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, 8ம் தேதி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உரிய நடவடிக்கை...

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, உயிரிழந்த உஷா குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டேன். இது சம்பந்தமாக, திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணையின் முடிவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து