குரங்கணி தீவிபத்து நடந்த ஒத்தமரம் பகுதிகளை சிறப்பு அதிகாரி நேரில் ஆய்வு விசாரணை துவக்கினார்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      தேனி
kurangani fire 22 3 18

போடி,- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் வந்த 36 பேர்களில் கொழுக்குமலைக்கு கீழே உள்ள ஒத்தமரத்தடியில் காட்டு தீயில் சிக்கி பலியான 18 பேர்கள் இறந்த பகுதிகளை சிறப்பு அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, ஈரோடு, கோயமுத்தூரை சேர்ந்த 36 பேர்கள் போடி வழியாக குரங்கணியிலிருந்து ட்ரெக்கிங் என்ற மலை ஏறும் பயிற்சியாக நடந்து டாப்டேஷன் மூணாறு வந்தடைந்தனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு 3 ஜீப்புகளில் தேவிகுளம், முட்டுகாடு, சின்னகானல், சூரியநல்லி வழியாக கொழுக்குமலை வந்தடைந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார்கள்.
பிறகு மறுநாள் 11-ம் தேதி கிளம்பியவர்கள் சரியாக சுமார் 2 மணியளவில் ஒத்தமரம் வந்தடைந்து மதிய உணவு அருந்தி விட்டு சுமார் 3.30 மணியளவில் நடக்க துவங்கினார்கள். ஏற்கனவே கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக குரங்கணி மலை பகுதிகளில் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து ஒத்தமரப்பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவில் தீப்பற்றி எரிந்தது. அந்த தீயிலிருந்து தப்பிப்பதற்காக 36 பேர்களும் நாலா பக்கமும் தெறித்து அங்கும் இங்கும் ஒடி பள்ளங்களில் உருண்டு தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி மாட்டி கொண்டனர். குரங்கணியை சேர்ந்த ராஜேஸ் என்ற வழிகாட்டி 10 பேர்களை அழைத்து கொண்டு வேறு பாதையில் தப்பித்து விட்டார்.
இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமையில், தேனி எஸ்.பி பாஸ்கரன், போடி டி.எஸ்.பி பிரபாகரன் ஆகியோர் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலேயே 9 பேர்கள் பலியாகிவிட்டனர். தீயில் கருகியும் கை கால்கள் உடைந்தும் தப்பிய 27 பேர்களை மீட்டு தேனி, மதுரை, கோவை, ஈரோடு மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வரையில் பலி எண்ணிக்கை 18 உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை, முதன்மை செயலர் அதுல்யாமிஸ்ரா ஐ.ஏ.எஸ் விசாரனை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் தீவிபத்து குறித்து விசாரணை செய்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் அதுல்யாமிஸ்ரா தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரமாக அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 22-ம் தேதி காலையில் 7 மணிக்கு குரங்கணியிலிருந்து ஆய்வு துவங்கும் என அறிவித்தார். அதன்படி நேற்று காலை 6.40 மணிக்கு சிறப்பு அதிகாரி குரங்கணிக்கு கலெக்டர் பல்லவிபல்தேவ், போடி டி.எஸ்.பி பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர், வனத்துறையினர்கள் வந்தடைந்தனர். குரங்கணியில் இருந்து காலை 7 மணியளவில் ஒத்தமரம் மலை பகுதி நோக்கி செங்குத்தான மலையில் 7 கிலோ மீட்டர் நடந்து சென்றடைந்தார். தீவிபத்தில் சிக்கிய 36 பேர்களும் உணவு அருந்திய இடம், தீப்பற்றி பரவிய இடம், தப்பிப்பதற்காக சிதறி ஓடி உருண்டு விழுந்த பள்ளம், பிணங்களை அடுக்கி வைக்கப்பட்டு ஹெலிகாப்ட்டரில் மீட்டெடுத்து சென்ற ஒத்தமரம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் அதுல்யாமிஸ்ரா கூறுகையில்,
9 பேர்கள் தீயில் கருகி பலியான மற்றும் ஒத்தமரப்பகுதிகளை பார்வையிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்கள் கொழுக்குமலையில் தங்கியிருந்த தனியார் விடுதி பார்த்து விட்டு பின்னர் மூணாறு, டாப்டேஷன் வரை சென்று பார்வையிட்டு இரவிற்குள் போடி திரும்பி விடுவேன். மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை போடி நகராட்சி அலுவலகத்தில் தீவிபத்து நிகழ்ச்சி பற்றிய சிறப்பு விசாரனை அலுவலகம் திறக்கப்படும். அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்களிடமிருந்து ஆடியோ, வீடியோ பதிவுகள், அவர்களும் உரையாடிய பதிவுகள், கிராம மக்கள் அவர்களின் உயிர்களை பணையம் வைத்து தீயில் கருகியவர்களை காப்பாற்றி உள்ள நிகழ்வு பதிவுகள் என எது இருந்தாலும் நேரில் வந்து தெரிவிக்கலாம், ஆதாரங்களை தரலாம் இறந்து போனவர்களின் சொந்த ஊர்களுக்கே நேரில் சென்று விசாரிக்க இருக்கிறேன் என்றார்.
 தீ விபத்து நடந்த ஒத்தமரம் பகுதியில் ஆய்வு செய்த பின்னர் அதுல்ய மிஸ்ரா கொழுக்குமலையில் இருந்து கேரள மாநிலம் வழியாக தமிழக எல்லையான டாப்ஸ்டேசன் சென்றார். அங்கிருந்து மீண்டும் மலைப்பாதை வழியாக நடந்தே குரங்கணி வந்தடைந்தார். அதுல்யமிஸ்ராவுடன் தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் உதயன், மதுரை மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் ராகேஷ்குமார், தேனி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மேகமலை வனச்சரணாலய அலுவலர் ராம்மோகன், மாவட்ட வன அலுவலர் கந்தசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேலு, வன ஆர்வலர் டாக்டர் என்.ஆர்.டி.ராஜ்குமார், போடி டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர். தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் குரங்கணி, கொழுக்குமலை, டாப்ஸ்டேசன் ஆகிய இடங்களில் விசாரணைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து