பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் நேற்று (27.03.2018) கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் முன்னிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கினார்கள்.
கர்ப்பிணி பெண்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சுகாதரத்துறையில் சித்த மருத்துவப்பிரிவின் மூலம் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறையான சித்த மருத்துவத்தின் மூலம் கர்ப்பினித்தாய்மார்கள் சுகப்பிரசவம் அடைவதற்கு ஏதுவாக அரிய மருந்துகள் அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினை வழங்கி வருகின்றார்கள். இந்தப்பெட்டகத்தில் கர்ப்பிணித்தாய்மார்களின் கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு மூன்று மாதத்திலும், தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றது. இந்த மருந்துகளை உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை நீங்கி, எடை குறைவான குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டு, சுகப்பிரவசத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கலாம். எனவே, தாய்மார்கள் இந்த பெட்டகத்தில் உள்ள மருந்துகளை மருத்துவரின் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அனைத்து கர்பினித்தாய்மார்களும் முறையாகப்பயன்படுத்தி தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடனும், தைரியத்துடனும் வளர்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்த்திடவேண்டும் இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கர்ப்பிணி தாய்மார்கள் வளமோடும், நலமோடும் வாழ வேண்டும் என்பதற்காக அம்மா பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். தமிழக முதல்வர் அனைத்து திட்டத்தையும் அம்மாவின் வழியில் செம்மையாக தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கி வரும் எண்ணற்ற திட்டங்களில் மிகச்சிறப்பான திட்டம் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மருந்துகளை முறையாக உட்கொள்வதால் கர்ப்பிணி தாய்மார்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். 175 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் ரத்த வங்கியுடன் கூடிய புதியக் கட்டிடம் விரைவில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் சசிகலா, சித்த மருத்துவ அலுவலர் மரு.காமராஜ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அலுவலர் மரு.ராஜா, தலைமை மகப்பேறு மருத்துவர் மரு.சூரியபிரபா, சித்தா உதவி மருத்துவ அலுவலர் மரு.விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.