முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமரின் அதிகாரங்கள் பறிப்பு: அதிபர் சிறிசேனா அதிரடி

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ஊழல் புகார்கள் எழுந்ததை அடுத்து, அவரது அதிகாரங்களை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிரடியாகக் குறைத்துள்ளார். அதன்படி, ரணிலின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டு மத்திய வங்கியின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, அவர் வசமிருந்த இலங்கை பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் அதிகாரங்களும் நிதியச்சமைருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைககள் அனைத்தும் அந்நாட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இதையடுத்து ஆளும் கூட்டணி அரசுக்குள் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும், விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அந்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் விக்ரமசிங்கே வசம் இருந்தன. அதற்கு ஆளுநராக அர்ஜூனா மகேந்திரன் என்பவரை அவர் நியமித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய வங்கி முதலீட்டு பத்திரங்களின் மூலம் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அர்ஜூனா மகேந்திரனை அதிபர் சிறீசேனா பதவி நீக்கம் செய்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள இலங்கை மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் அதிபருமான ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

ஏப்ரல் 4-ம் தேதி அதன் மீதான விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. இதனிடையே, அண்மையில் நடைபெற்ற அந்நாட்டு உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இது, ஆளும் கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இதற்கு நடுவே, விக்ரமசிங்கே மீதான ஊழல் புகார்களும் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, அவரது அதிகாரங்களைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் சிறிசேனாவுக்கு எழுந்தது. அதன் தொடர்ச்சியாகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து