ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: ஜி.கே.மணி, பாலபிரஜாபதி அடிகளார் ஆதரவு

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களை பாமக தலைவர் ஜி.கே. மணி, சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைக் கண்டித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும்                       அ. குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும்  மனு அளித்து கடந்த 44 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தூத்துக்குடி மக்களின் குரலுக்கு மதிப்பளித்து ஆலை விரிவாக்கத்திற்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு மக்களை காக்கும் அரசாக இருக்க வேண்டும். அரசு உடனடியாக ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை நிறுத்தாவிட்டால் மக்கள் போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக மாறும் என்றார்.

இதேபோல, சாமிதோப்பு தலைமைப் பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குமரெட்டியாபுரம் பகுதி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், மக்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக கூறுவது தவறு. உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றார்.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சில மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவில் செய்முறைத் தேர்வு நடைபெற்று வருவதால் சிறிது நேரம் முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதேபோல, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஐடிஐ நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து