முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள்விழா அமைச்சர் மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம் - ராமநாதபுரத்தில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாளையொட்டி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பாக, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ராமநாதபுரம் மாவட்;ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 259 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:- மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 30.03.1760 அன்று பிறந்தார்.  குழந்தைப் பருவத்திலேயே ராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு எண்ணிலடங்காத அறப்பணிகளையும், தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டார். இன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதபுரம் சுவாமி திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தை கட்டி முடித்தவர். அன்றைய காலகட்டத்தில் ராமநாதபுரம் சீமையில் அதிகளவிலான கைத்தறி நெசவுகளை நிறுவி, ஆங்கிலேயர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளை தவிர்த்திட இந்திய மக்களை ஊக்கப்படுத்தியவர். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டவேண்டுமென்ற ஆணையினை துச்சமென நினைத்து கப்பம் கட்ட மறுத்தவர்.
 ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும், வணிகங்களையும் எதிர்த்து போராடிய மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியை  அன்றைய ஆங்கிலேய அரசு கட்டுப்படுத்திட எண்ணி, அவர் 12வயதாக இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர் படை ராமநாதபுரம் கோட்டையினை சுற்றி வளைத்து போரிட்டது.  இப்போரில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் கைது செய்யப்பட்டு திருச்சியிலுள்ள கோட்டையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சிறையில் கழித்தார். 1782ஆம் ஆண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றார். சிறிது காலம் பொறுமையாக இருந்த மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் தனது உள்ளத்தில் ஊறிய சுதேசி சிந்தனையின் காரணமாக மீண்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி முடக்கினார். இதன் காரணமாக 1795-ஆம் ஆண்டு வெள்ளையர் மற்றும் நவாப்புகளின் கூட்டுப்படை மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் மீண்டும் கைது செய்து திருச்சிக் கோட்டையில் சிறை அடைத்தது. திருச்சி சிறையில் சில நாட்கள், அதன்பின்பு சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது வாழ்நாள் இறுதி மூச்சு வரை இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி 23.01.1809 அன்று சென்னை ஜாhஜ் கோட்டையில் உயிர் நீத்தார். மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை கொளரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவரது  பிறந்த நாளான மார்ச் 30-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 மேலும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக நுழைவுவாயில் அருகே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 8 அடி உயர வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையினை கடந்த 08.02.2016 அன்று முன்னாள் தமிழ்நாடு  முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக்காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்கள்.  மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி  அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். அன்னாரின் வாரிசுதாரர்கள் 75 நபர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6500ஃ- வீதம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிப்பது நமது கடமையாகும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ.37லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்களும், மாவட்;ட சமூகநலத்துறையின் சார்பாக திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.30லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலும், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.2லட்சத்து 59ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பாக கூட்டுப் பண்ணையம் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.84லட்சத்து 80ஆயிரத்து 406 மதிப்பில் மானிய விலையில் பண்ணை கருவிகள் என மொத்தம் 259 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் இத்தகைய அரசு நலத்திட்ட உதவிகளை முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் மன்னர்.திரு.என்.குமரன் சேதுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, மகளிர் திட்ட அலுவலர் கோ.குருநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்  இந்திராகாந்தி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரு.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, சமூக பாதுகாப்புத் திட்ட தணித்துணை ஆட்சியர் ஆ.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, அரசு அலுவலர்கள் , மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் வாரிசுதாரர்கள் , பயனாளிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து