கூடங்குளம் சுற்று வட்டார மக்களுக்காக 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன வளாக இயக்குநர் டி.எஸ்.செளத்ரி தகவல்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      திருநெல்வேலி

கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்காக இதுவரை 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் டி.எஸ்.செளத்ரி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- 

6 ஆயிரம் வீடுகள்

 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்து ஒப்பந்தங்களும் உரிய விதிமுறைப்படியே வழங்கப்படுகிறது. அனைத்து ஒப்பந்ததாரர்களும் தங்கள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் ஊதியம் வழங்குவதை அணுமின் நிலையம் உறுதி செய்துள்ளது. வங்கி பணப் பரிவர்த்தனை ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னரே, ஒப்பந்ததாரர்களுக்கான தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக சில ஊடகங்களில் வெளியாகியிருப்பது போன்று எந்தவொரு எழுத்து மூலமான புகாரும் எங்களுக்கு வரவில்லை.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்துப் பணியிடங்களும் உரிய விதிமுறைப்படியும், வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும் நிரப்பப்படுகின்றன. இங்கு கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இது பல்வேறு அதிகாரிகள் மற்றும் கமிட்டிகளின் மேற்பார்வையிலேயே நடைபெற்றுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய ஆள் சேர்ப்பு விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சரியான தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த காலங்களில் இங்கு பணியமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே. இதுதவிர இங்கு சுதந்திரமான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவும் செயல்படுகிறது.தேசிய அணுமின் கழகம், அணுசக்தி துறை சார்பில் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசுடன் இணைந்து ரூ.500 கோடி மதிப்பில் பல்வேறு நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள வீடு இல்லாத மக்களுக்காக ரூ.300 கோடி செலவில் கான்கிரீட் வீடுகளும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 10 ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் தற்போது 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து