முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா ஆர்ப்பாட்டம்: பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவத்துடனான மோதலில் காயமடைந்த ஒரு பாலஸ்தீனர் 3 நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.

யூத குடியேற்றத்தை எதிர்த்து கடந்த 1976-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது 6 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட தினம் நில தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், 42-வது நில தினத்தையொட்டி, நில மீட்புக்கான மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்குமாறு ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த அழைப்பை ஏற்று, ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேல் எல்லையிலுள்ள தடுப்பு வேலி வரை வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதில் பங்கேற்ற சிலர் தடுப்பு வேலியைத் தாண்டி அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இஸ்ரேல் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவற்றின் மூலமும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், 2 நாள்களில் மட்டும் 16 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தச் சூழலில், மேலும் ஒரு பாலஸ்தீனர் தற்போது உயிரிழந்ததைத் தொடர்ந்து, வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தின்போது பாலஸ்தீனர்கள் உயிரிழந்தது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து