முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 48 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதுடன் தொடரை 3-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

267 ரன்கள் முன்னிலை
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 488 ரன்னும், ஆஸ்திரேலிய அணி 221 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ-ஆன்’ கொடுக்காமல் 267 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது. டீன் எல்கர் 39 ரன்னுடனும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 34 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

344 ரன்கள் டிக்ளேர்...
4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டீன் எல்கர், பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபாரமாக ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் சதம் அடித்தார். அவர் அடித்த 8-வது சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 264 ரன்னாக உயர்ந்த போது, காயத்துக்கு சிகிச்சை பெற்று ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் (120 ரன்கள், 178 பந்துகளில் 18 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து டீன் எல்கர் 81 ரன்னிலும், குயின்டான் டி காக் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிலாண்டர் 33 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

கடைசி நாள் ஆட்டம்
இதனை அடுத்து 612 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. ரென்ஷா 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 7 ரன்னிலும், ஜோபர்ன்ஸ் 42 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹேன்ட்ஸ் கோம்ப் 23 ரன்னுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.  இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
இதில், ஹேன்ட்ஸ்கோம்ப் (24), மார்ஷ் (7) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து விளையாடிய வீரர்களில் மார்ஷ் (0), டிம் பெய்னி (7), கம்மின்ஸ் (1), லயன் (9), சேயர்ஸ் (0) ரன்களில் வெளியேறினர்.  ஹேசல் உட் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  அந்த அணி 46.4 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பிலாந்தர் 6 விக்கெட்டுகளையும், மோர்கெல் 2 விக்கெடடுகளும் மற்றும் மஹராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்கா 492 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.  தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.  ஆட்ட நாயகனாக பிலாந்தரும், தொடர் நாயகனாக ரபடாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 1970ம் ஆண்டிற்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்ளூரில் தென்னாப்பிரிக்க அணி பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். இதன் வெற்றி 48 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தியமாகியுள்ளது மேலும், 48 வருட சோகத்திற்கு முடிவு கட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து