மணிரத்னம் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா

Source: provided
திரைத்துறையில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் தனக்குத்தானே அளித்துக் கொள்ளும் போஷாக்கின் சிறந்த கூறு என்ன தெரியுமா? 'ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு சவாலை எதிர்கொண்டு அவைகளை தகர்த்தெறிதல். நடிகை ஸ்வாதிஷ்டா இந்த நிலையில் அதை உள்ளூர உணர்ந்தே இருக்கிறார்.
"திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி" எனக் கூறும் ஸ்வாதிஷ்டா தன் ஆரம்பத்திலேயே சவரக்கத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார்.
இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து, தொலைக்காட்சி தொகுப்பாளராக துவங்கிய ஸ்வாதிஷ்டாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். நான் ஜர்னலிஸம் படிக்கும்போதே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன, நான் தான் நடிக்க தயங்கினேன்.
ஆனால், மிஷ்கின் சாரின் சவரக்கத்தியில் நடித்து பார்க்கலாம் என முயற்சித்தேன், அங்கு தொடங்கியது இன்று ஜீவா சாரின் கீ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்" என்றார் ஸ்வாதிஷ்டா.அவருடைய கதாபாத்திரத்தை பற்றி கேட்டபோது, "படத்தை பற்றி எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்று இயக்குனர் ரொம்ப கண்டிப்பாக சொல்லி விட்டார்.
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம், கதைக்கு வலு சேர்க்கும் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். ஜீவா சாருடன் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். என்னுடைய பெரும்பாலான காட்சிகள் ஜீவா சாருடன் சேர்ந்து தான். சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்ஜே பாலாஜி ஆகியோருடன் நல்ல பல தருணங்கள் அமைந்தது" என்றார்.
சவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பல நினைவுகள் இருக்கின்றன. என்னைப் போல ஒரு புதுமுகத்துக்கு மிகப்பெரும் இயக்குனர்களான மிஷ்கின் சார், ராம் சார் ஆகியோரை படப்பிடிப்பில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். ஆனால் எனக்கு சவரக்கத்தியில் நானும் நடிக்கிறேன் என்ற மேலான, உயர்ந்த உணர்வு தான் இருந்தது.
மிஷ்கின் சார் படப்பிடிப்பில் அனைவரையும் சமமாக நடத்துவார், அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு பொருந்தியவர். எதிர்காலத்தில் அவரின் நிறைய படங்களில் நடிக்க ஆசை. ராம் சாருடன் எனக்கு பெரிய உரையாடல்கள் இல்லையென்றாலும் அவருடைய நடிப்பால் நான் கவரப்பட்டேன்,
குறிப்பாக கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது" என சந்தோஷமாக சொல்லும் ஸ்வாதிஷ்டா 'மதம்' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள்,
அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் நான் வியந்து பார்க்கிறேன். நான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை ஷாலினி அஜித்குமார். அவரின் வேலையை பற்றி குறிப்பிட ஒரு இணையான சொல் கிளாசிக் தான்.
இளம் வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரன், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு. மேலும், மணிரத்னம் சார் அலைபாயுதே 2 படத்தை எடுப்பார், அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பார்" என்ற மெய்மறந்த வேடிக்கையான கனவும் எனக்கு வரும்" என்றார்.