முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால் வலியுடன் போராடி நாட்டுக்கு பெருமை சேர்த்த எனது மகன் சதீஷ்குமாரின் தாய் உருக்கம்

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

வேலூர்: கால் வலியுடன் போராடி தனது மகன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக சதீஷ்குமாரின் தாய் தெய்வானை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 218 பேர் களம் இறங்குகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் 77 கிலோ பளுத்தூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த சதீஷ்குமார் காமல்வெல்த் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கம் வென்றுள்ளார். இதனை அவரது சொந்த கிராம மக்கள் வெடி வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதால் சதீஷ்குமாரின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமாரின் தந்தை தனது மகன் தங்கம் வென்றதால் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், வேலூர் மாவட்டத்துக்கும் பெருமை என்று பெருமிதம் கொண்டார்.

எனது மகனால் காமன்வெல்த் அரங்கில் இந்திய கொடி பறப்பது பெருமையாக இருக்கிறது என்றும் சதீஷின் தந்தை சிவலிங்கம் தெரிவித்துள்ளார். சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

கால் வலியுடன் போராடிய சதீஷ் கடந்த ஓராண்டாக சிகிச்சைப்பெற்று வந்தார் என்றும் ஒரு வாரம் மட்டுமே பயிற்சி செய்து விளையாடி தனது மகன் சதீஷ் இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்துள்ளார் என்றும் அவரது தாய் தெய்வானை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றவர் சதீஷ்குமார். சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து