முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடுவானம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மடிக்கணினிகளை வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடுவானம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.அப்போதுஅவர் பேசியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய தேசத்தில் வேறு எந்த மாநில அரசாலும் முழுமையாக செயல்படுத்த இயலாத திட்டமான மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். அவர்கள் வழியினை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 2011-2017 ஆம் ஆண்டு வரை மொத்தம் 38 லட்சத்து 40 ஆயிரம் மாணவ மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 61,746 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2017-2018 கல்வியாண்டில் 10,241 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது தமிழ்நாடு அரசு, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை தயார் செய்து கொள்ள ஏதுவாக ‘தொடுவானம் போட்டித் தேர்வு” பயிற்சி நிலையங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு பயிற்சி நிலையம் என்ற அடிப்படையில் 11 பயிற்சி நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பயிற்சி நிலையங்களில் கலந்து கொண்டு நீட் தேர்வுக்காக பயிற்சி பெற 271 மாணவ மாணவியர்கள் பதிவு செய்துள்ளனர். இம்மாணாக்கர்களுக்கு இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டு குறைந்த கட்டணத்தில் தரமான முறையில் அதிக டீவி சேனல்களை பார்த்து மகிழ்திடும் வகையில் அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ் வழங்கும் திட்டம், தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் முதற்கட்டமாக அம்மா வைபை மண்டலம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 39 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பில் முதற்கட்டமாக  வைபை, கணினி, உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பொதுத்தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மாணாக்கர்கள் 12 ஆம் வகுப்பில் மாநில அளவில் 2 ஆம் இடத்தையும், 10 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடத்தையும் பெற்றார்கள். நடப்பாண்டு அரசு பொதுத்தேர்வு முடிவில் நமது மாணவர்கள் மாநில அளவில் முதலிடத்தை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பேசினார். இவ்விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.விசுவாசம் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து